காரமடையில் ஓடும் காருக்குள் கண்ணாடி விரியனை விழுங்கிய நாக பாம்பு-கார் உரிமையாளர் அதிர்ச்சி

காரமடை : கோவை மாவட்டம் காரமடையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் விளைவித்த தானியங்கள், தேங்காய், வெங்காயம், காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை இருப்பு வைத்து நல்ல விலைக்கு வரும்போது அதனை எடுத்து விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் கோவையை சேர்ந்த விவசாயி ராஜா (50) என்பவர் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வெங்காயம் இருப்பு வைத்துள்ளார்.

அதனை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் காரில் வந்தார். அங்கு பொருட்களை பார்த்து விட்டு மீண்டும் காரை இயக்கினார். அப்போது, காருக்குள் இருந்து சப்தம் வந்துள்ளது. இதனையடுத்து உஷாரான அவர் காரின் இன்ஜின் பேனட்டை திறந்து பார்த்தபோது உள்ளே சுமார் 5 அடி நீள நாக பாம்பு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி காருக்குள் இருந்த நாகப்பாம்பை பத்திரமாக மீட்டனர். பாம்பை பார்த்த தீயணைப்புத்துறையினருக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக எதனையோ அந்த பாம்பு விழுங்கியிருப்பதை அறிந்தனர். பின்னர், சற்று நேரத்தில் விழுங்கியதை கீழே வாய் வழியாக வெளியேற்றியது.

அப்போது, நாகப்பாம்பு ஏற்கனவே கண்ணாடி விரியன் பாம்பை விழுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நாகப்பாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர் அதனை கோத்தகிரி சாலையில் உள்ள அடர் வனப்பகுதியில் விடுவித்தனர். இச்சம்பவத்தால் காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் சற்று நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post காரமடையில் ஓடும் காருக்குள் கண்ணாடி விரியனை விழுங்கிய நாக பாம்பு-கார் உரிமையாளர் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: