கலைஞர் ஆற்றிய பணிகள் தமிழர் உள்ளவரை மறவாமல் காலத்தால் போற்றப்படும்: செல்வப்பெருந்தகை புகழாரம்

சென்னை: கலைஞர் ஆற்றிய பணிகள் தமிழர் உள்ளவரை மறவாமல் காலத்தால் போற்றப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை புகழாரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட அனைத்து முற்போக்கு கொள்கைகளாலும் தனது வாழ்நாள் முழுவதும் போராடி, ஆட்சியில் பொறுப்பேற்றிருந்த நாள்களில் உன்னத நோக்கங்கங்களை நிலைநாட்டிய முத்தமிழறிஞர் கலைஞருக்கு இன்று 102வது பிறந்தநாள். முத்தமிழறிஞர் கலைஞர் நம்மை விட்டு பிரிந்தாலும், அவர் கொண்ட கொள்கையாலும், சரித்திர சாதனைகளாலும், கலாச்சார நினைவுகளோடும் என்றென்றும் நம்மோடு வாழ்பவர்.

தமிழ்நாட்டில் அவர் ஆட்சியில் இருந்த போது, எந்தத் திட்டம் செயல்படுத்தினாலும் அதன் நோக்கம் சமூகநீதியாகவே இருக்கும். சமூகநீதிச் சிந்தனையையொட்டிய அவருடைய திட்டங்கள் அனைத்தும் வரலாற்று சாதனைகள் ஆகும். சமூகநீதிக்காகவும், சாமான்யர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகள் அனைத்தும் தமிழர் உள்ளவரை மறவாமல் காலத்தால் போற்றப்படும். பாராட்டப்படும்.வாழ்நாள் முழுவதும் தமிழ்மொழி வாழ, தமிழர்கள் வாழ, தமிழ்நாடு வாழ, தமிழ் கலாச்சாரம் வாழ வாழ்ந்த முத்தமிழறிஞரின் பிறந்தநாள் விழாவினை தமிழ்செம்மொழி நாளாக போற்றிப் புகழ்பாடுவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post கலைஞர் ஆற்றிய பணிகள் தமிழர் உள்ளவரை மறவாமல் காலத்தால் போற்றப்படும்: செல்வப்பெருந்தகை புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: