தென் சென்னையை குறிவைக்கும் பாஜக?.. நாளை தமிழ்நாடு வரும் அமித்ஷாவை சந்திக்க ஓபிஎஸ், இபிஎஸ், ஜி.கே.வாசன் நேரம் கேட்டுள்ளதாக தகவல்..!

சென்னை: நாளை சென்னை வரும் அமித்ஷாவை சந்திக்க ஓபிஎஸ், இபிஎஸ் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் வகையில் ஒன்றிய அரசும், பாஜகவும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. மேலும் மோடி தலைமையிலான பாஜக அரசின் சாதனைகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த மே 30ம் தேதி முதல் ஜூன் மாதம் 30ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் தோறும் பாஜக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் வேலூரில் 11-ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்காக தமிழ்நாட்டுக்கு நாளை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரம் ஒதுக்கப்பட்டால் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சந்திப்பு நடைபெற வாய்ப்பு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல், பாஜக போட்டியிடும் தொகுதிகளை முன்கூட்டியே இறுதி செய்வது குறித்து பேசப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை பள்ளிக்கரணையில் வரும் 11ம் தேதி பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார். 2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 9 எம்பி தொகுதிகளில் போட்டியிட பாஜக விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் சென்னை, வேலூர், கோவை, நெல்லை, நீலகிரி, திருப்பூர், விருதுநகர், விழுப்புரம் உள்ளிட்ட 9 தொகுதிகளில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அதை முன்வைத்தே தென்சென்னை மற்றும் வேலூருக்கு அமித்ஷா வரவுள்ளதாக பா.ஜ.க வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

The post தென் சென்னையை குறிவைக்கும் பாஜக?.. நாளை தமிழ்நாடு வரும் அமித்ஷாவை சந்திக்க ஓபிஎஸ், இபிஎஸ், ஜி.கே.வாசன் நேரம் கேட்டுள்ளதாக தகவல்..! appeared first on Dinakaran.

Related Stories: