இந்தியாவின் கட்டமைப்பை சிதைத்த பாஜவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: திருச்சியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருச்சி: இந்தியா முழுவதும் நமது அணி வெற்றி பெற வேண்டும். ஏனென்றால் இந்தியாவின் கட்டமைப்பை பாஜ சிதைத்து விட்டது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது. என்று திருச்சியில் நேற்று நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை வீழ்த்தும் நடவடிக்கைகளில் ‘இந்தியா’ கூட்டணி தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற பணிகளை தொடங்க வேண்டும் என்று கட்சியினருக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன் ஒருபகுதியாக நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் திமுக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாநிலம் முழுவதுமுள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை மண்டலம் மண்டலமாக சென்று சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

இதன் முதற்கட்டமாக திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள ராம்ஜி நகரில், டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். முன்னதாக பயிற்சி பாசறை கூட்டத்தை காலை 10 மணிக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். தொடர்ந்து முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மூத்த வழக்கறிஞர்கள் பயிற்சி அளித்து பேசினர். இதற்காக 11 ஏக்கரில் சுமார் 13 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் வடக்கு, தெற்கு, மத்தி, திருச்சி வடக்கு, தெற்கு, மத்தி, புதுக்கோட்டை வடக்கு, தெற்கு ஆகிய 15 திமுக மாவட்டங்களுக்கு உட்பட்ட 12,645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாடாளுமன்ற வெற்றிக்கும் நீங்கள்தான் பொறுப்பாளர்கள். நாடும் நமதே நாற்பதும் நமதே என உங்கள் மீது நம்பிக்கை வைத்துதான் முழங்கினேன். கலைஞர் கூறியதுபோல வெற்றி ஒன்றுதான் இலக்காக அமைய வேண்டும். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது தான் உங்கள் முதல் பணி. வாக்குச்சாவடி உறுப்பினர்களை ஒருங்கிணைத்து தினமும் வாக்காளர்கள் வீடுகளுக்கு சென்று பரப்புரை செய்வது, நம் சாதனைகளை எடுத்துச் சொல்வது இரண்டாவது பணி. வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களை அழைத்து வரச்செய்வது மூன்றாவது முக்கிய பணி. இந்த மூன்று பணிகளையும் சிறப்பாக செயல்படுத்த வாக்காளர்கள் குடும்பத்துடன் நீங்கள் நெருக்கமான நட்பு கொண்டிருக்க வேண்டும். உங்கள் வாக்குச்சாவடியில் 250 குடும்பங்கள் இருக்கிறது என்று சொன்னால், அந்த குடும்பங்களில் ஒருவராக நீங்கள் மாற வேண்டும்.

அரசின் திட்டங்கள் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒரு மாதத்தில் உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள அத்தனை வீடுகளுக்கும் நீங்கள் சென்று வரலாம். நமக்கு எதிராக அவதூறு, பொய்செய்திகளை பரப்பிட ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் சமூக ஊடகங்களில் கட்டாயம் கணக்கு தொடங்கி, அவதூறுகளுக்கு பதில் சொல்லுங்கள். இந்தியாவின் கட்டமைப்பை பாஜக சிதைத்து விட்டது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது. பாஜக ஆட்சி தொடர்ந்தால் இந்தியாவை, சமூகநீதியை, அரசியல்அமைப்பு சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. மீண்டும் பாஜக வந்தால் இந்தியாவில் ஜனநாயகமே இருக்காது.

ஏன் தமிழ்நாடு என்ற மாநிலமோ, அதற்கான சட்டமன்றமோ, முதல்வரோ, அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ இருக்க மாட்டார்கள். அத்தனையையும் காலி செய்துவிடுவார்கள். உள்ளாட்சி அமைப்புகள் இருக்காது. இதுதான் அனைத்து மாநிலங்களுக்கும் நடக்கும். ஒற்றை கட்சி ஆட்சி அமைந்தால் ஒரே ஆள் கையில் அதிகாரம் போய்விடும். அது ஆபத்தான கொள்கை. அதனால்தான் இந்த தேர்தலில் பாஜ வீழ்த்தப்பட வேண்டும். இதற்காகவே 26 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம். 26 கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டி உள்ளோம். இந்தியாவை காப்பாற்ற போவது இந்தியா கூட்டணி தான்.

இதை பிரதமர் மோடியால் தாங்கி கொள்ள முடியவில்லை. பாஜகவை எதிர்க்க வலுவான அணியை அமைத்துவிட்டார்களே என்று நினைத்து ஏதேதோ பேசுகின்றனர். இந்த நோக்கத்தை இப்போது அல்ல, ஓராண்டு காலமாகவே சொல்கிறேன். அதனால் அவர்களுக்கு என் மீது கோபம். அதனால் தான் மத்திய பிரதேசத்துக்கு போனாலும் திமுகவை திட்டுகிறார். அந்தமான் விமான நிலையத்தை திறந்து வைக்க போனாலும் அங்கேயும் திமுகவை திட்டுகிறார்.
‘வாரிசுகளுக்கான கட்சி’ என்று பிரதமர் கூறுகிறார். இதை கேட்டுக்கேட்டு புளிச்சுப்போச்சு. வேறு ஏதாவது கண்டுபிடிச்சு சொல்லு. நான் சொல்கிறேன் இது வாரிசுகளுக்கான கட்சி தான். ஆமாம் இது வாரிசுகளுக்கான கட்சி தான். ஆரியத்தை வீழ்த்தும் திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் ஆகியோரின் வாரிசுகள் நாங்கள்.

இதை தைரியமாக பெருமையோடு என்னால் சொல்ல முடியும். பாஜ யாருடைய வாரிசு? கோட்சேவின் வாரிசுகள் தான் நீங்கள். உங்களால் தைரியமாக சொல்ல முடியுமா? சொல்வதற்கான தைரியம் உங்களுக்கு உண்டா? குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு என்ன நடந்தது என்பதை இந்த நாடு மறக்கவில்லை. அன்று குஜராத்தில் நடந்ததை இன்று மணிப்பூர் நினைவூட்டுகிறது. மணிப்பூரில் மே மாதம் தொடங்கிய வன்முறையை இன்று வரை ஆளும் பாஜகவால் தடுக்க முடியவில்லை. ஒன்றிய பாஜக அரசாலும் தடுக்க முடியவில்லை. வன்முறையாளர்களும், மாநிலத்தை ஆளும் பாஜக அரசின் மணிப்பூர் போலீசும் கைகோர்த்துக்கொண்டு மக்களை தாக்கிக்கொண்டிருக்கிறது. நான் சொல்லவில்லை. பாஜகவை ஆளும் மணிப்பூர் எம்எல்ஏ பாவோலியன்லால் ஹாக்கி சொல்லியிருக்கிறார். ஒற்றுமையாக இருக்கக்கூடிய மக்களை வேற்றுமைப்படுத்தி மனதில் மனக்கசப்பை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் நிகழ்வால் தான் இன்று மணிப்பூர் பற்றி எரிகிறது.

அதிமுக பெயரில் இயங்கும் கொத்தடிமை கூட்டத்தில் யாராவது மணிப்பூரை பற்றி பேசினார்களா? வாய்க்கு வந்ததை பேசுகிறாரே எடப்பாடி பழனிசாமி பேசினாரா? பாஜகவுக்கு அடிமையில்லை என்ற பழனிசாமி, மணிப்பூரை ஆளும் மாநில முதல்வரையோ ஒன்றிய பாஜக அமைச்சரையோ கண்டித்தாரா? பழனிசாமியை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழல் ஒழிப்பு குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு அதற்கு தடை கேட்டு உச்சநீதிமன்றம் போனவர் இபிஎஸ், அவருடன் அமைச்சர்களாக இருந்த கறைபடிந்த ஊழல் பேர்வழிகளெல்லாம் பக்கத்தில் வைத்துக்கொண்டு பிரதமர் பேசுகிறார். பேசலாமா? கர்நாடகா மாநிலத்தில் பாஜக செய்த ஊழலுக்காகத் தானே அந்த மாநில மக்கள் விரட்டியடித்தார்கள். அது மறந்து போய்விட்டதா.

அதிமுகவினர் மீதான ஊழல் வழக்குகளை காட்டிஅவர்களை அடிபணிய வைத்தது பாஜ. இவர்களை இந்த தேர்தலில் முழுமையாக நாம் வீழ்த்தியாக வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலங்களையும் மணிப்பூராகி விடாமல் தடுக்க வேண்டும். தமிழை, தமிழ்நாட்டை, தமிழ்மக்களை காக்க வேண்டுமானால் இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை காப்பாற்றியாக வேண்டும். என் கடமையின் தூதுவர்களாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இருக்கப்போவது நீங்கள், பணியாற்றப்போவது நீங்கள். களம் காணுங்கள், கழகத்தின் வெற்றிக்காக களமாடுங்கள், நாற்பதும் நமதே, நாடும் நமதே. இந்தியா வெல்லும். அதை 2024 சொல்லும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* அரசு மருத்துவமனையில் முதல்வர் திடீர் ஆய்வு
வாக்குச்சாவடி முகவர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் சுற்றுலா மாளிகைக்கு சென்ற முதல்வர் திடீரென்று பெரியமிளகுபாறை பகுதியில் உள்ள மக்கள் நலவாழ்வு மையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு மருத்துவர்கள், பணியாளர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். பின்னர் சிகிச்சை முறைகளையும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் வெளியே முதல்வரிடம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர். குழந்தைகளுடன் நின்ற ஒரு பெண்ணிடம் பேசினார். தொடர்ந்து, திருச்சி அரசு பொதுமருத்துவமனைக்கு முதல்வர் சென்றார். அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டு நலம் விசாரித்தார். பின்னர் பிரசவ வார்டுக்கு சென்று கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களை சந்தித்து சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அங்குள்ள உணவு கூடத்தை பார்வையிட்டார்.

பின்னர், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது கோதுமை ரவா உப்புமா, சுண்டல் ஆகியவற்றை முதல்வர் ருசி பார்த்தார். இதையடுத்து நர்ஸ் சரஸ்வதி என்பவரிடம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்து கேட்டறிந்தார். முதல்வரின் இந்த ஆய்வின் போது மருத்துவமனை டீன் நேரு, மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர். தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா? என்பதை ஒவ்வொரு பகுதிக்கு செல்லும் போது முதல்வர் ஆய்வு நடத்துவது வழக்கம். இதன்படி திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்வர் திடீர் விசிட் செய்தது குறிப்பிடத்தக்கது. முதல்வர் நேரடியாக நலம் விசாரித்தது நோயாளிகளிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post இந்தியாவின் கட்டமைப்பை சிதைத்த பாஜவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: திருச்சியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: