இந்தியாவில் முதல் ‘ஆப்பிள் ஸ்டோர்’ மும்பையில் திறக்கப்பட்டது.. விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்பு!!

மும்பை : ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் நேரடி விற்பனை நிலையம் மும்பையில் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன், மேக் கணினி, லேப்டாப், கடிகாரம் உள்ளிட்டவற்றிற்கு இந்தியாவில் நாளுக்கு நாள் தேவை அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் உலகளவில் விற்பனையை உயர்த்துவதற்கு இந்தியாவை தனது முக்கிய விற்பனை மண்டலமாக மாற்றி கொள்ள ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் கடந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த விற்பனை 5 சதவீதம் குறைந்தாலும் இந்தியாவின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டது அதே நேரம் இந்தியாவிற்கென்று ஆன்லைன் விற்பனை மையத்தை மட்டும் உருவாகியுள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்திய நகரங்களில் நேரடி விற்பனை நிலையங்கள் இல்லை

இந்த நிலையில், இந்தியாவில் கிளைகளை அமைத்து தொழிலை பெருக்க திட்டமிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம் முதற்கட்டமாக மும்பையில் உள்ள வணிக வளாகத்தில் தனது விற்பனை நிலையத்தை(ஸ்டோர்) திறந்துள்ளது. இதனை ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் (Tim Cook) சரியாக காலை 11 மணிக்கு திறந்து வைத்தார். இந்த விற்பனை நிலையம் மும்பையில் பந்த்ரா குர்லா காம்பிளக்ஸில் உள்ள ஜியோ வோர்ல்ட் ட்ரைவ் மாலில் அமைந்துள்ளது. எனவே இது ஆப்பிள் பிகேசி (Apple BKC) என அழைக்கப்படுகிறது.

இதில் பார்வையாளர்களை கவரும் வண்ணங்களில் மடிக்கணினிகள் , ஐபோன்கள், ஆப்பிள் வாட்ச் மற்றும் அது சார்ந்த பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் பிகேசி திறக்கப்பட்ட பின் வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஸ்டோருக்குள் டிம் குக்குடன் பலரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இதைத் தொடர்ந்து டெல்லியிலும் தனது 2வது விற்பனை நிலையத்தை ஆப்பிள் நிறுவனம் வரும் 20ம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகை மாதுரி தீட்ஷித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post இந்தியாவில் முதல் ‘ஆப்பிள் ஸ்டோர்’ மும்பையில் திறக்கப்பட்டது.. விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்பு!! appeared first on Dinakaran.

Related Stories: