சுதந்திர தினத்தை முன்னிட்டு விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

சென்னை: சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்த சென்னை விமானநிலையத்தில் நேற்று அதிகாலை முதல் 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் ஒன்றிய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகளவு கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலைய வளாகத்தில் கடந்த 1ம் தேதி முதல் 5 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்தது. இங்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணிகள் உள்பட அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் சென்னை விமானநிலைய பாதுகாப்பு ஏற்பாட்டுக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். சிசிடிவி கேமராக்கள் அமைத்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கின்றனர். விமானப் பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

பயணிகள் திரவப் பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில் போன்றவற்றை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அனைத்து பார்சல்களும் பலகட்ட சோதனைக்கு பின்னரே விமானத்தில் ஏற்றப்படுகின்றன. உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாகவும், வெளிநாட்டு பயணிகள் மூன்றரை மணி நேரத்துக்கு முன்பாகவும் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுதந்திர தினத்தையொட்டி நேற்று அதிகாலை, சென்னை விமான நிலையம் முழுவதும் 7 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. வரும் 16ம் தேதி நள்ளிரவுடன் 7 அடுக்கு பாதுகாப்பு நிறைவு பெற்றாலும், வரும் 20ம் தேதி நள்ளிரவு வரை 5 அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post சுதந்திர தினத்தை முன்னிட்டு விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: