மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதையில் உலா வரும் காட்டு யானை : வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள், மான், காட்டு மாடு சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றன.

குறிப்பாக, கோத்தகிரி சாலை மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகத்திற்கு இடையே அமைந்துள்ளதால் வனவிலங்குகள் இச்சாலையினை கடந்து வனப்பகுதியின் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறம் செல்வது வழக்கமாக கொண்டுள்ளன. இந்நிலையில், மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலைகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது.

நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி சாலையில் உள்ள முதல் வளைவு அருகே ஒற்றை காட்டு யானை சாலையோரம் உலா வந்தது. இதனைக்கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் நீண்ட நேரமாக ஒற்றை காட்டு யானையை வனத்திற்குள் விரட்ட முயன்றனர்.

இருந்தும் யானை அங்கிருந்து சென்று 2வது வளைவு அருகே நின்றது. தொடர்ந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின் இந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து வாகனங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றனர். இது குறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், “கோத்தகிரி சாலையில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது.

கோத்தகிரி சாலை வழியாக வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடனும், எச்சரிக்கையிடனும் வாகனங்களை இயக்க வேண்டும். சாலையோரங்களில் யானையை கண்டால் இறங்கி அதனை தனியாக விரட்டும் பணியில் ஈடுபடக்கூடாது. அதேபோல், யானை அருகே சென்று செல்பி எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ முயற்சி செய்யக்கூடாது. யானையை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது. மீறினால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதையில் உலா வரும் காட்டு யானை : வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: