இதனால் கடந்த 1999ம் ஆண்டு முதல் வேலூர் கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் இயங்கி வந்த கட்டிடத்தில் அரசு அருங்காட்சியகம் 7 பிரிவுகளுடன் இயங்கி வருகிறது. அதன் முன்பு வேலூர் அரசு அருங்காட்சியக அடையாளமாக டைனோசர் பொம்மை வைக்கப்பட்டது. தமிழகத்தில் இயங்கி வரும் அரசு அருங்காட்சியகங்களில் வருவாய் அதிகம் ஈட்டும் அருங்காட்சியகமாக சென்னைக்கு அடுத்த இடத்தில் வேலூர் அருங்காட்சியகம் உள்ளது.
இந்த நிலையில் சட்டமன்றத்தில் வேலூர் அரசு அருங்காட்சியகம் ₹1 கோடியில் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானது.அதற்கேற்ப ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும், அதற்கான டெண்டர் விடப்பட்டு கடந்த ஜூலை மாதம் முதல் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதில் கூடுதல் காட்சி அலமாரிகளுடன், 1400 ஆண்டுகள் பழமையான கற்சிற்பங்கள் அடங்கிய கூடம், 200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான போர் வாள்கள் கூடம், ஓவியக்கூடம், சுற்றுலாத்தலங்கள் குறித்த தகவல்கள், புகைப்படங்கள் அடங்கிய கூடம், முப்பரிமாண கூடம் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களுடன் வேலூர் அரசு அருங்காட்சியகத்தை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இதில் சிறப்பு அம்சமாக சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரும் வகையில் நிஜ டைனோசரை போன்று புதிய டைனோசரை பொருத்தும் பணிகள் நேற்று மாலை தொடங்கி நடந்து வருகிறது. இதுகுறித்து வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் கூறியதாவது: வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியகம் 24 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது ₹1 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. நவீன விளக்கு வசதிகள், ஏ.சி. வசதியுடன் கூடிய அரங்குகள், முப்பரிமாண காட்சிகள் அடங்கிய கூடம் உள்ளிட்டவை அமையவுள்ளன. இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நவீன மயமாகும் அரசு அருங்காட்சியக கூடம் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி சீரெக்ஸ் வகையிலான புதிய டைனோசர் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதன் சிறப்பு அம்சமாக இந்த டைனோசர் கண்களை உருட்டுதல், மூச்சு விடுதல், கைகளை அசைத்தல், பயங்கரமாக சத்தமிடுதல் என நிஜ டைனோசர் போல் செயல்படும். அதேபோல் இந்தாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூ.2.50 கோடியில் அரசு அருங்காட்சியகம் விரிவுபடுத்தப்பட உள்ளது. அருங்காட்சியகம் எதிரில் திருவள்ளுவர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் இயங்கிய கட்டிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்ட உடன் மேலும் அருங்காட்சியகம் விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினர்.
The post ரூ.1 கோடியில் புதுப்பொலிவு பெறும் அருங்காட்சியகம் கோட்டையில் சுற்றுலா பயணிகளை கவரும் தத்ரூப டைனோசர் appeared first on Dinakaran.