வருமானவரித்துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி: ரூ.35 லட்சம் பெற்று போலி பணி நியமன ஆணை வழங்கிய சேலம் பாஜக நிர்வாகி கைது

சேலம்: வருமான வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்த வழக்கில் சேலம் மேற்கு மாவட்டம் ஓபிசி அணியின் செயலாளர் கமலக்கண்ணனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரி பணியிடத்திற்கு வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி நியமன ஆணையை கொடுத்து ரூ.35 லட்சம் பெற்று கொண்டு மோசடி செய்த சேலம் மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகி ஓபிசி அணியின் பொதுச்செயலாளர் கமலக்கண்ணன் என்பவரை புகாரின் பேரில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டேரி அருகே உள்ள சாம்ராஜ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு கடந்த ஆண்டு பாஜக பிரமுகரான கமலக்கண்ணன் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து ராஜுவின் மகனுக்கு வருமான வரித்துறையின் வேலை தருவதாக கமலக்கண்ணன் கூறியுள்ளார். மேலும், ரூ.35 லட்சம் கொடுத்தால் அதிகாரியாக வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜு தனது மகன் சந்திரமோகனுக்கு வேலை வாங்குவதற்காக ரூ.35 லட்சம் கொடுத்திருக்கிறார். அப்போது வருமான வரித்துறை ஆத்திகரிக்கான பணி நியமன ஆணையின் நகலை வழங்கியுள்ளார்.

அந்த நகலை கொண்டு வருமான வரித்துறை அலுவலகத்திற்கு சென்ற போது அந்த நகல் போலியானது என்பது தெரியவந்தது. இதனையறிந்த ராஜு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதனையடுத்து விசாரணையில் கமலக்கண்ணன் ரூ.35 லட்சம் பணம் பெற்றதும், போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

The post வருமானவரித்துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி: ரூ.35 லட்சம் பெற்று போலி பணி நியமன ஆணை வழங்கிய சேலம் பாஜக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: