ஆற்காடு வட்டாரத்தில் பாரம்பரிய முறையில் இயற்கை வேளாண்மை செய்து ஊக்கத்தொகை பெறலாம்

*வேளாண் உதவி இயக்குனர் தகவல்

ஆற்காடு : ஆற்காடு வட்டாரத்தில் விவசாயிகள் பாரம்பரிய முறையில் இயற்கை வேளாண்மை செய்து ஊக்கத் தொகை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆற்காடு வேளாண்மை உதவி இயக்குனர் பு.சூரிய நாராயணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: செயற்கை ரசாயனம் மற்றும் இடு பொருட்கள் மூலம் தொடர்ந்து விவசாயம் செய்து வருவதால் நிலம், நீர் மற்றும் ஆகாய மண்டலம் மாசுபட்டு வருகிறது. அதனால் ஏற்படும் பின் விளைவுகளை சரி செய்யும் பொருட்டு மத்திய மற்றும் தமிழக அரசால் பாரம்பரிய இயற்கை வேளாண்மை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஆற்காடு வட்டார விவசாயிகள் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த திட்டத்தில் ஒரு தொகுப்பில் அதாவது 20 எக்டரில் 20 அல்லது அதற்கு மேலாகவும் விவசாயிகள் சேர்ந்து கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் ரசாயன வேளாண்மையை முற்றிலும் தவிர்த்து விட்டு அங்கக அதாவது இயற்கை இடுபொருட்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும். இதற்கு ஊக்கத்தொகையாக முதலாம் ஆண்டில் ₹12,000, 2ம் ஆண்டில் ₹10,000, 3ம் ஆண்டில் ₹9,000 பின் கொணர் மானியமாக விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இது தவிர அங்கக விவசாயிகளுக்கு பயிற்சிகள், சுற்றுலாக்கள், அங்கக பதிவு செலவு அனைத்தும் இந்த திட்டத்தில் செய்து தரப்படும். முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். உழவன் செயலி மூலம் பதிவு செய்யலாம். மேலும் ஆற்காடு உதவி வேளாண் இயக்குனர் அலுவலகத்திலும் நேரில் வந்தும் பதிவு செய்யலாம்.இந்த சிறந்த வாய்ப்பை ஆற்காடு வட்டார விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

The post ஆற்காடு வட்டாரத்தில் பாரம்பரிய முறையில் இயற்கை வேளாண்மை செய்து ஊக்கத்தொகை பெறலாம் appeared first on Dinakaran.

Related Stories: