சட்டவிரோத ஆயுதங்கள் தடுப்பு நடவடிக்கை தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு

புதுடெல்லி: சட்டவிரோத ஆயுத தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக கையாள்வதாக தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் கள்ளத் துப்பாக்கி பயன்பாட்டை முழுமையாக தடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘‘கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் கள்ள துப்பாக்கி உட்பட சட்டவிரோத ஆயுதங்களை மீட்டெடுத்தல் பணிகள் தொடர்ந்து துரிதமாக நடத்தப்படுகிறது.

குறிப்பாக 2013ம் ஆண்டு முதல் 2023 வரையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மொத்தம் 1355 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 1458 சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 697 வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. எழுபது வழக்குகளில் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 62 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் மனுவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் கைப்பற்றப்பட்ட அயுதங்களில் பெரும்பாலானவை பேரல் வகை துப்பாக்கிகளாகும். அவை அனைத்தும் காடு மற்றும் மலைப்பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் பயன்படுத்துவதாகும்.அவர்கள் உணவுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் பறவைகள் மற்றும் விலங்குகளை வேட்டையாட மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதில் முக்கியமாக குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் குற்ற நோக்கத்திற்காக ஆயுதங்களை பயன்படுத்துவது கிடையாது. அது மிகவும் குைறவான எண்ணிக்கையான ஒன்றாக தான் இருக்கிறது.

அதேபோன்று உரிமம் பெறாத துப்பாக்கிகள் மற்றும் அதனால் ஏற்படும் தீமைகளை முற்றிலும் ஒழிக்கும் விதமாக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் சட்ட விரோத ஆயுதம் தொடர்பான அச்சுறுத்தலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சந்தேகப்படும் கிராமங்களில் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்படுவது மட்டுமில்லாமல், பொதுமக்கள் தானாக முன்வந்து சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்குமாறும் அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. சட்டவிரோத துப்பாக்கிகளை தேடுவதில் சிறப்பு இயக்கங்கள் மாநிலத்தில் நடத்தப்படுகிறது. மேலும் சந்தேகிக்கப்படும் நபர்களிடம் வழக்கமான விசாரணை தொடர்ந்து நடத்தப்படுகிறது. குற்றவாளிகளுக்கு எதிராக தீவிர கண்காணிப்பும் ற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக இதுபோன்ற சட்டவிரோத செயல்களை தடுக்க வழக்கமான வாகன சோதனைகள், திடீர் சோதனைகள் ஆகியவற்றை நடத்தி கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏதேனும் புதிய உத்தரவுகளை பிறப்பித்தாலும் அதனை கடைபிடிக்க தமிழக அரசு தயாராக இருக்கிறோம் என தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழக அரசின் இந்த மனுவை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசு அதாவது மாநில காவல்துறைக்கு, சிறப்பான சட்டவிரோத தடுப்பு செயல்களுக்காக பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

The post சட்டவிரோத ஆயுதங்கள் தடுப்பு நடவடிக்கை தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: