×

பறக்கும் ரயில் நிலையங்களை மேம்படுத்த விரைவில் டெண்டர்: ஐஐடி வல்லுநர் குழு ஆய்வு: ஐஐடி வல்லுநர் குழு ஆய்வு

சென்னை: பறக்கும் ரயில் நிலையங்களை மேம்படுத்த விரைவில் டெண்டர் விடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் பேருந்துகள், புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில், பறக்கும் ரயில்கள் என்று பல வகை பொது போக்குவரத்து இருக்கிறது. இதில் பறக்கும் ரயில் 1995 முதல் பயன்பாட்டில் இருக்கிறது. சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதை பரங்கிமலை வரை நீட்டிக்கக் கட்டுமான பணிகள் பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேசமயம் பறக்கும் ரயிலில் போதிய வசதிகள் இல்லை என்ற புகார் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கிடையே பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாகச் சென்னை மெட்ரோ நிர்வாகத்திற்கும் தெற்கு ரயில்வேக்கும் இடையே ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதற்கிடையே பறக்கும் ரயில் திட்டத்தை மேம்படுத்தச் சென்னை மெட்ரோ நிர்வாகம் முதற்கட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்காக சென்னை ஐஐடி வல்லுநர்களுடன் மெட்ரோ நிர்வாகம் கை கோர்த்துள்ளது. முதற்கட்டமாகச் சென்னை ஐஐடி வல்லுநர் குழு, மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நிலையங்களில் ஆய்வு நடத்த உள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணையாகப் பறக்கும் ரயில் நிலையங்களை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்த குழு பரிந்துரைக்கும்.

பயணிகள் வசதியை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை தவிர வருவாய் ஈட்டும் வழிமுறைகள் குறித்தும் ஐஐடி குழு ஆய்வு நடத்தி அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ளது. இந்த குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் 17 பறக்கும் ரயில் நிலையங்களையும் மேம்படுத்துவது பற்றி திட்ட அறிக்கை தயாரிக்க ஒரு தனியார் ஏஜென்சியை நியமிக்கச் சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “ரயில் நிலையங்களை புதுப்பித்து மேம்படுத்தி, புதிய ஏசி ரயில் பெட்டிகள் வாங்கப்படும் வரை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த பறக்கும் ரயில்களைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே இயக்கும். அதற்கிடையே எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தே இந்த சென்னை ஐஐடி வல்லுநர் குழு பரிந்துரைகளை அளிக்கும். தானியங்கி முறையில் டிக்கெட் கொடுப்பது, பார்க்கிங், சிசிடிவி கேமரா என வசதிகளை மேம்படுத்துவது மற்றும் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை இந்த குழு வழங்கும்.

இந்த பறக்கும் ரயில் நிலையங்களை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணையாக மாற்றப் போகிறோம். ஐஐடி குழு அடுத்து ஒரு சில மாதத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் . அதன் அடிப்படையில் அனைத்து ரயில்நிலையங்களுக்குமான டெண்டர் விடப்படும். நாங்களும் விரிவான திட்ட அறிக்கையைத் தயார் செய்வோம், அதில் பயணிகள் எண்ணிக்கை, 2ம் கட்ட மெட்ரோவுடன் இதை ஒருங்கிணைப்பது, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை ஆகிய விபரங்கள் அதில் இருக்கும். அதைப் பொறுத்து தேவையான நிதியை நாங்கள் அரசிடம் கோருவோம். ஆனால், இதற்கு சில காலம் ஆகும். அதுவரை தெற்கு ரயில்வே தொடர்ந்து ரயில்களை இயக்கும். பயணிகளுக்கு நல்ல பயண அனுபவத்தை தர தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தனர்.

* ரயில் நிலையங்களை புதுப்பித்து மேம்படுத்தி, புதிய ஏசி ரயில் பெட்டிகள் வாங்கப்படும் வரை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த பறக்கும் ரயில்களைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே இயக்கும்

The post பறக்கும் ரயில் நிலையங்களை மேம்படுத்த விரைவில் டெண்டர்: ஐஐடி வல்லுநர் குழு ஆய்வு: ஐஐடி வல்லுநர் குழு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : IIT ,CHENNAI ,Dinakaran ,
× RELATED ஐஐடி வேளச்சேரி நுழைவாயில் முன் பெற்றோர் போராட்டம்..!!