ஹைதராபாத்தில் 3 ஆண்டுகளாக வழங்காமல் இருந்த மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு இன்று தொடங்கியது..!

ஹைதராபாத்: கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக வழங்காமல் இருந்த, மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு ஹைதராபாத்தில் இன்று தொடங்கியுள்ளது. ஆஸ்துமா மற்றும் ரத்த சோர்வையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த 175 வருடங்களாக பிரசாதம் வழங்கப்படுகிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மிருகசீர கார்த்திகையின்போது ‘மீன் பிரசாதம்’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஹைதராபாத்தில் உள்ள நம்பல்லி கண்காட்சி மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெறும். இதில் உயிருடன் இருக்கும் சிறிய விரால் மீனின் வாயில் மஞ்சள் நிற மூலிகை மருந்தை வைத்து அதனை நோயாளிகளின் வாயில் வைத்து விழுங்க வைப்பார்கள். சைவம் சாப்பிடுபவர்களுக்கு இந்த மூலிகை மருந்து மீனுக்கு பதிலாக, வெல்லத்தில் கலந்து கொடுக்கப்படும். இந்த மருந்தை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு எடுத்துக் கொண்டால் ஆஸ்துமா நோயிலிருந்து குணமடையலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த மீன் பிரசாதத்தைப் பெற ஆண்டுதோறும், ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகள் வருவார்கள். பாத்தினி ஹரிநாத் கவுட் மற்றும் அவரது குடும்பத்தினர் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மீன் மருந்தை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள்.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜூனில் மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு தொடங்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடப்பதால் லட்சக்கணக்கான நோயாளிகள் இந்த மருந்தைப் பெற நாம்பள்ளி மைதானத்தில் குவிந்துள்ளனர். காலை 8 மணி முதல் மீன் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. மைதானத்தில் இதற்காக சுமார் 30 கவுன்டர்களை அம்மாநில மீன்வளத்துறையினர் அமைத்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், குழந்தைகளுக்காக சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இரண்டரை லட்சம் உயிருள்ள விரால் மீன்களை மீன்வளத்துறையினர் வழங்கியுள்ளனர். அவற்றின் மூலம் நோயாளிகளுக்கு மீன் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பிரசாதத்தை பெற்றுச் செல்கின்றனர். மீன் பிரசாதத்தை கர்ப்பிணிகள் தவிர அனைவரும் பெறலாம் என பாத்தினி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நோயாளிகளுக்கு உணவு, குடிநீர் போன்றவற்றை வழங்கி வருகின்றன. ஏராளமான நோயாளிகள் குவிந்துள்ளதால், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் நிகழ்வை கண்காணித்து வருகின்றனர்.

The post ஹைதராபாத்தில் 3 ஆண்டுகளாக வழங்காமல் இருந்த மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு இன்று தொடங்கியது..! appeared first on Dinakaran.

Related Stories: