இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்காக கடந்த ஜூன் 14ம் தேதி சென்னை பூந்தமல்லியை அடுத்த ஆண்டர்சன் பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு போலீசார் சென்றனர். ஆனால், அவர் வீட்டில் இல்லை. இந்த நிலையில், தலைமறைவாக உள்ள பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பூவை ஜெகன்மூர்த்தி தரப்பில், கடத்தல் சம்பவத்தில் எனக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை. எனக்கு எதிராக யாரும் எந்த புகாரும் கொடுக்கவில்லை. பொய்யான குற்றச்சாட்டுடன் என்னை கைது செய்ய காவல்துறை தேடி வருவதால் எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறை தரப்பில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பூவை ஜெகன் மூர்த்தியை விசாரணைக்கு அழைக்க முயற்சித்தோம். கைது செய்யப்பட்ட மகேஸ்வரி, பூவை ஜெகன் மூர்த்தியிடம் பேசியுள்ளார். அதற்கான ஆதாரம் உள்ளது. எனவே, இந்த கடத்தல் சம்பவத்தில் பூவை ஜெகன் மூர்த்தி மட்டுமல்லாமல், ஏடிஜிபி ஜெயராமும் உடந்தையாக இருந்திருக்கிறார். அவருடைய அரசு வாகனத்தை இந்த கடத்தல் சம்பவத்தில் பயன்படுத்தியுள்ளனர். எனவே, பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும். அவர்கள் இருவரும் ஆஜராகாவிட்டால், கைது செய்து நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.
The post ஆள் கடத்தல் வழக்கு.. பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் ஆணை! appeared first on Dinakaran.
