தோட்டக்கலை சங்கத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1,000 கோடி மதிப்புள்ள நிலத்தை சட்டப்படி அரசு கையகப்படுத்தியது: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்; தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 110 கிரவுண்ட் நிலத்தை சட்டப்படிதான் அரசு கையகப்படுத்தியதியுள்ளது என்றும் மீட்கப்பட்ட நிலத்துடன் சேர்த்து செம்மொழி பூங்காவை உலகத்தரம் வாய்ந்த பூங்காவாக மாற்ற உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா மேம்பாலம் அருகே கதீட்ரல் சாலையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி பல ஆண்டுகளாக ‘தோட்டக்கலைச் சங்கம்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அந்த நிலத்தை பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் இந்த நிலத்திற்கு எதிர் பகுதியில் டிரைவ் இன் உட்லண்ட் உணவு விடுதி அனுபவித்து வந்த நிலத்தை மீட்க கடந்த 1989ம் ஆண்டு அரசு நடவடிக்கை எடுத்தது. நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த நிலம் அரசுக்குச் சொந்தமானது என்று உத்தரவிட்டது. இதையடுத்து, டிரைவ் இன் உணவு விடுதி அனுபவித்துவந்த 20 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தோட்டக்கலை துறை சார்பில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. இதையடுத்து, தனியார் சங்கத்தின் ஆக்கிமிப்பில் இருந்த 110 கிரவுண்ட் நிலத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுத்தது. நடவடிக்கைக்கு எதிராக தோட்டக்கலை சங்கம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிசெய்தது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை அந்த இடத்தை கையகப்படுத்தி அரசின் தோட்டக்கலைத்துறை வசம் ஒப்படைத்துவிட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், விதிகளை மீறி அரசு இந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. சங்கத்தின் பெயரில் நிலம் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. அதிகார துஷ்பிரயோகம் செய்து இடத்தை கையகப்படுத்தியுள்ளனர். எனவே இடத்தை கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் நிலத்தை கையகப்படுத்தியது சரிதான் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில் இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நில நிர்வாக ஆணையருக்கு தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது. அந்த இடத்தை மனுதாரர் சங்கம் தவறாக பயன்படுத்தி உள்ளது. அந்த இடத்தில் விளம்பரம் பலகைகள் வைத்து வாடகை வசூலித்து தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு தான் இந்த நிலத்தின்மீது உரிமை உள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அரசுக்கு சொந்தமான நிலம்தான் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இடத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காகவே அரசு இந்த இடத்தை கையகப்படுத்தி உள்ளது. அந்த இடம் மக்களுக்கு சொந்தமானது. மீட்கப்பட்ட நிலத்துடன் சேர்த்து செம்மொழி பூங்காவை லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்கா போலவும், துபாயில் உள்ள மிராகிள் பூங்கா போலவும் உலகத்தரத்துடன் பூங்கா அமைத்து அந்த இடத்தை அரசு மேம்படுத்த உள்ளது என்று வாதிட்டார்.

இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரரான புவனேஷ் குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, இந்த இடம் அரசுக்கு சொந்தமானது. அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்துத்தான் இந்த இடத்தை கையகப்படுத்தி உள்ளது. இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. பொதுமக்களின் நலனுக்காகவே இந்த இடத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது. கூடிய விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த இடம் வர உள்ளது என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

The post தோட்டக்கலை சங்கத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1,000 கோடி மதிப்புள்ள நிலத்தை சட்டப்படி அரசு கையகப்படுத்தியது: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்; தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: