இல்லம் தேடி ஆவின் என்ற பெயரில் வாகனங்களில் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை: அமைச்சர்கள் உதயநிதி, நாசர் தொடங்கி வைப்பு

சென்னை: இல்லம் தேடி ஆவின் என்ற பெயரில் வாகனங்களில் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனையை நேற்று அமைச்சர்கள் உதயநிதி மற்றும் நாசர் தொடங்கி வைத்தனர். ஆவின் பால் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கும், உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகப்படுத்துவதற்கும் அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. பால் விற்பனையை தவிர, மோர், தயிர், லஸ்ஸி, ஐஸ்கிரீம், பன்னீர் மற்றும் இனிப்பு வகைகள் போன்ற பல்வேறு பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்நிலையில், அரசு ‘இல்லம் தேடி ஆவின்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய முன்னதாக திட்டமிட்டிருந்தது.

அதன்படி சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் கோடைக்காலத்தை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில் இல்லம் தேடி ஆவின் திட்டத்தின் மூலம் நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் ஐஸ்கிரீம், தயிர், மோர், லசி போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்காக முதற்கட்டமாக 33 பேட்டரி வாகனங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கரூர் வைசியா வங்கியின் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.40 லட்சத்தில் பேட்டரி வண்டிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் முன்னுரிமை அடிப்படையில் பேட்டரி ஐஸ்கிரீம் விற்பனை வாகனங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு பேட்டரி வாகனம் மற்றும் ஒரு குளிர்சாதன பெட்டியானது ரூ.1,21,658 விலையாகும். மேலும் ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் இந்த ஐஸ்கிரீம் வண்டியில் சாக்கோ பார், கசாடா, கேண்டி, பிரீமியம் ஐஸ்கிரீம் உள்ளிட்ட 100 வகையான ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்ய உள்ளது.

The post இல்லம் தேடி ஆவின் என்ற பெயரில் வாகனங்களில் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை: அமைச்சர்கள் உதயநிதி, நாசர் தொடங்கி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: