தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாக குறைந்ததை அடுத்து 16 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைத்து கொண்டே வருகிறது. ஒகேனக்கல்லில் கடந்த சில நாட்களாக அதிகப்படியான நீர்வரத்து காரணமாக ஐவர்பாணி, மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் அதிக அளவில் கொட்டியது.
நீர்வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. விடுமுறை தினங்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப்பயணிகள் வரத்து அதிகமாக இருந்த நிலையில், குளிக்க தடை விதிப்பால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
இந்நிலையில் ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் காலை 18,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 17,000 கனஅடியாக சரிந்தது. இரவு 7 மணியளவில், 12 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாக குறைந்ததை அடுத்து 16 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மிலாடி நபியை ஒட்டி பள்ளி, விடுமுறை என்பதால் இன்று காலை முதலே ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ளனர்.
The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 16 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி! appeared first on Dinakaran.