குமிழி ஊராட்சியில் ரூ.36.50 லட்சம் மதிப்பீட்டில் நலவாழ்வு மையம்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

கூடுவாஞ்சேரி: குமிழி ஊராட்சியில் ரூ.36 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் நலவாழ்வு மையத்தை வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் குமிழி ஊராட்சியில், குமிழி, மேட்டுப்பாளையம், அம்மணம்பாக்கம், ஒத்திவாக்கம், அஸ்தினாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட குமிழி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி எதிரே ரூ.36 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் நலவாழ்வு மையம் கட்டி முடிக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், குமிழி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரிகோதண்டபாணி தலைமை தாங்கினார்.

மேம்படுத்தப்பட்ட நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ், சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ், ஆனந்த், ஊராட்சி மன்ற துணை தலைவர் தினேஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு எம்எம்ஏ வரலட்சுமிமதுசூதனன், காட்டாங்குளத்தூர் ஒன்றிய துணை தலைவர் ஆராமுதன் ஆகியோர் கலந்துகொண்டு ரூ.36 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நலவாழ்வு மையத்தை திறந்து வைத்தனர். பின்னர், இதன் நினைவாக மரக்கன்றுகளை நட்டனர். இதனை அடுத்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினர். இதில், ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post குமிழி ஊராட்சியில் ரூ.36.50 லட்சம் மதிப்பீட்டில் நலவாழ்வு மையம்: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: