அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கஞ்சா போதை ஆசாமிகள் ரகளை: சிகிச்சை அளித்த மருத்துவர்களை தாக்கினர்

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட கஞ்சா போதை ஆசாமிகள் சிகிச்சை அளித்த மருத்துவர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நேற்று மது மற்றும் கஞ்சாவை ஒரே நேரத்தில் அருந்திய இளைஞர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதனால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் கஞ்சா இளைஞர்களுக்கு கை, கால், கழுத்து உட்பட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. ரகளையில் காயமடைந்த கடம்பத்தூரைச் சேர்ந்த காசி உள்ளிட்ட 2 இளைஞர்களும் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக வந்த மற்ற நோயாளிகளை தாக்கி மேலும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களையும், மருத்துவர்களையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புறக்காவல் போலீசிற்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த காவலர்கள் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் போதை இளைஞர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டனர். பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த திருவள்ளூர் போலீசார் கஞ்சா இளைஞர்களை அமர வைத்து சிகிச்சை அளிக்க முற்பட்டனர். ஆனாலும் கஞ்சா இளைஞர்கள் சிகிச்சை அளிக்க ஒத்துழைக்காமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளும், மருத்துவர்களும் மிகவும் அச்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அந்த கஞ்சா இளைஞர்கள் மருத்துவமனையில் இருந்து 2 மணி நேரத்திற்குப் பிறகு புறப்பட்டனர். இதனால் மருத்துவமனை பரபரப்பாக காட்சியளித்தது.

The post அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கஞ்சா போதை ஆசாமிகள் ரகளை: சிகிச்சை அளித்த மருத்துவர்களை தாக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: