மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை 2 மடங்கு உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையினை இரு மடங்காக உயர்த்தியும் மற்றும் 2013-2014-ஆம் நிதியாண்டில் இத்திட்டத்திற்காக ரூ.6.50 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கியும் ஆணை வெளியிடப்பட்டது.

2018-2019-ஆம் நிதியாண்டு முதல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் சுமார் 52 நலத் திட்டங்கள் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டிற்குள் செயல்படுத்திட மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு அதிகாரப்பகிர்வு (Delegation of Power) வழங்கி ஆணை வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகை (Scholarship) வழங்கும் திட்டமும் இடம் பெற்றுள்ளது.

2023-2024-ஆம் நிதியாண்டிற்கான இத்துறையின் மானியக் கோரிக்கையின் போது முதலமைச்சர் கீழ்க்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்: “மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையினை இரு மடங்காக உயர்த்தி, 22,300 மாணவர்கள் பயன் பெறும் வகையில் ரூ.700 இலட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை 2 மடங்கு உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்காக ரூ.14.90 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 1-5-ம் வகுப்பு வரையிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்ந்துள்ளது. 6-8-ம் வகுப்பு வரை வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ரூ.3,000-ல் இருந்து ரூ.6,000-ஆக உயர்த்தியுள்ளது.

9-12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு கல்வி உதவித் தொகை ரூ.4,000-ல் இருந்து ரூ.8,000-ஆக உயர்ந்துள்ளது. பட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ.6,000 இனி ரூ.12,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தொழில்கல்வி, முதுகலைப்பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.7,000-ல் இருந்து ரூ.14,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 

The post மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை 2 மடங்கு உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: