இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். தமிழகத்தில் கூல் லிப், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று முறையிட்டனர். அப்போது மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், தமிழகத்தில் எந்த குட்கா தயாரிப்பிற்கும் அனுமதி இல்லை. பல்வேறு கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்து வருகிறது என தெரிவித்தனர். இருதரப்பு கருத்துக்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி, ‘தற்போது கூல் லிப், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் வரை சென்றுள்ளது. பள்ளி மாணவர்களை பாதிக்க கூடிய அளவிற்கு விற்பனையும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
பள்ளி மாணவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். இப்படியே விட்டால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களும் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஒருபோதும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது’ என கண்டனம் தெரிவித்ததோடு, ‘கள்ளச்சாராயம் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்போர் மீது குண்டர் சட்டத்தை எப்படி பயன்படுத்துகிறார்களோ அதேபோல கூல் லிப், குட்கா உள்ளிட்டவற்றை விற்பவர்கள் மீதும் ஏன் குண்டாஸ் போடக்கூடாது?’ என கேள்வி எழுப்பினார். ‘நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய, மாநில அரசுகளுக்கு விரைவில் போதைப் பொருட்களை தடை செய்வது குறித்த உரிய வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றமே பிறப்பிக்க நேரிடும்’ என எச்சரித்து வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
The post பள்ளி மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும்.! கூல் லிப் குட்கா வகைகளை தடை செய்ய விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை appeared first on Dinakaran.