சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6ம் தேதி பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6ம் தேதி பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்திய விமானப்படையின் 92-வது நிறுவன தினத்தையொட்டி வரும் 6ம் தேதி காலை 11 மணியளவில் பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி, சென்னை கடற்கரையில் நடைபெறுகிறது. இதில் அனைத்து வகை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சாரங் மற்றும் சூரியகிரண் வான்சாகச குழுக்கள் பங்கேற்கின்றன. இந்த சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுவர். இந்திய விமானப்படை 1932 ஆண்டு அக்டோபர் 8ம் தேதி நிறுவப்பட்டது. இதையடுத்து ஆண்டு தோறும் அக்டோபர் 8 அன்று நாடு முழுவதும் உள்ள இந்திய விமானப்படை தளங்கள் மற்றும் விமான நிலையங்களில் இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் அக்டோபர் 8ம் தேதி 92-வது இந்திய விமானப் படை தினம் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. மேலும், ஒவ்வொரு இந்திய விமானப்படை தினத்தன்றும் டெல்லியில் விமானப்படை சாகசங்கள், அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இந்திய விமானப்படை வீரர்கள் நடத்துவது வழக்கம். இந்த நிலையில் 92-வது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ஏர்ஷோ எனப்படும் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதற்காக அக்டோபர் 2ம் தேதி(நேற்று), 3ம் தேதி(இன்று), 4ம் தேதி(நாளை) மற்றும் வரும் 5ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சிகளும், சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் அணிவகுப்பு பயிற்சியும் நடத்தப்படுகிறது. இதையடுத்து வரும் 6ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சிகளும், அக்டோபர் 8ம் தேதி தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. 6ம் தேதி காலை 11 மணியளவில் பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. இதில் அனைத்து வகை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சாரங் மற்றும் சூரியகிரண் வான்சாகச குழுக்கள் பங்கேற்கின்றன. இந்த சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் இந்திய விமானப்படை தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் நடைபெறும் விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக பிரதமர் மோடி வருகிற 6ம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி மெரினா கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

 

The post சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6ம் தேதி பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: