கோவை: கோவையில் ஆடுகளை திருடி பல்வேறு இடங்களில் இறைச்சி கடை நடத்திய 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார் மனுக்கள் வந்த வண்ணம் இருந்தன. அண்மையில், வடவள்ளியில் முருகேசன் என்பவரது வீட்டில் கட்டி வைத்திருந்த 6 ஆடுகளை காணவில்லை எனவும் புகார் வந்தது.இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஆடுகளை திருடியது வடவள்ளி பகுதியை சேர்ந்த வினோத்குமார், சதீஷ்குமார், சரவணன், சண்முகம், சுகன்யா, சாதிக்பாஷா என்பது தெரியவந்தது. இவர்கள் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆம்னி வேன்களில் சென்று, ஆடுகளை திருடி வந்துள்ளனர்.
ஆடுகளை திருடுவதற்கு முன்பாக, பைக்குகளில் சென்று நோட்டமிட்டு, அதன்பிறகு மாருதி வேனை வரவழைத்து, அதில் ஆடுகளை கடத்திச்சென்றுள்ளனர். இவர்கள் மீது, மேட்டுப்பாளையம், சுந்தராபுரம், சாயிபாபாகாலனி, குனியமுத்தூர், ேபாத்தனூர் உள்பட பல்வேறு காவல்நிலையங்களில் மொத்தம் 12 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இவர்கள், ஆடுகளை திருடி, வடவள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இறைச்சிக்கடை நடத்தி வந்துள்ளனர். இவர்களிடமிருந்து 51 ஆடுகள், வேன், ஒரு பைக், ஒரு மொபட் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 6 பேரும், கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post ஆடுகளை திருடி இறைச்சி கடை நடத்திய 6 பேர் கும்பல் சிக்கியது: 51 ஆடுகள் பறிமுதல் appeared first on Dinakaran.