சிறுமி பாலியல் பலாத்காரம் ரியல் எஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை: சிறுமிக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ரியல் எஸ்டேட் நடத்தும் நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த 11 வயது சிறுமி தன் தோழியின் வீட்டுக்கு படிக்க சென்றபோது, தோழியின் தந்தை சிறுமிக்கு பல முறை மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ரியல் எஸ்டேட் தொழில்புரியும் அந்த நபருக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலெட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளதால் ரியல் எஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும். மேலும், சிறுமிக்கு இழப்பீடாக 7 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

The post சிறுமி பாலியல் பலாத்காரம் ரியல் எஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Related Stories: