அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொது சிவில் சட்டத்தை பாஜக கையில் எடுத்திருப்பது ஏன்?.. பின்னணி அரசியல் குறித்து எழும் பரபரப்பு கேள்விகள்

புதுடெல்லி: அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒன்றிய பாஜக அரசு தற்போது பொது சிவில் சட்டம் குறித்த கருத்து கேட்புகளை கேட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள அரசியல் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த 150 ஆண்டுகளாக நாடு முழுவதும் பொது கிரிமினல் சட்டம் நடைமுறையில் உள்ளது. இதன்படி கிரிமினல் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் சாதி, மத, மொழி வேறுபாடு இல்லாமல் அனைவருக்குமான பொதுவானதாக உள்ளது. ஆனால் திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துரிமை, பாகப்பிரிவினை, குழந்தையை தத்தெடுத்தல் உள்ளிட்ட விவகாரங்களுக்கான பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதில் சிக்கல்களும், எதிர்ப்புகளும் நிலவுகின்றன. பல்வேறு மத ரீதியான தனி நபர் சட்டங்கள் நடைமுறையில் உள்ளதால், பொது சிவில் சட்டம் என்பது அவசியமற்றதாக கருதப்படுகிறது.

அதேநேரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மத ரீதியான சட்டங்கள், பெண்களின் உரிமைகள் மற்றும் பல்வேறு அம்சங்களில் மக்களின் உரிமைகளை பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே இதை சீர்படுத்த பொது சிவில் சட்டத்தை உருவாக்கி அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு பெண் உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அனைத்து மதத்தினருக்கும் பொதுவான பொது சிவில் சட்டம் பிரான்ஸ், அமெரிக்கா போன்ற பல்வேறு வளர்ந்த நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் 22வது இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளிடம் இருந்து கருத்து கேட்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. முன்னதாக 21வது இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் தொடர்பான கருத்து கேட்பை 2018ம் ஆண்டு நடத்தியது.

அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் குறித்த கருத்து கேட்பு என்பது, தற்போது நாட்டின் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதனால் பொது சிவில் சட்டம் என்றால் என்ன? அதன் அர்த்தம் என்ன? அதில் உள்ள அரசியல் என்ன?, அதன் வரலாறு என்ன? போன்ற கேள்விகள் மக்களிடம் எழுந்துள்ளது.

பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
‘யூனிபார்ம் சிவில் கோட்’ என்று அழைக்கப்படும் பொது சிவில் சட்டமானது அனைவருக்கும் ெபாதுவான சட்டமாக இருக்கும். பல நாடுகளில் இச்சட்டம் அமலில் இருந்தாலும் கூட, ​​இந்தியாவில் எத்தனை மதங்கள் இருக்கிறதோ, அவ்வளவு சட்டங்கள் உள்ளன. ெபாது சிவில் சட்டம் அமலாகும்பட்சத்தில், அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் இருக்கும். திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, குடும்பச் சொத்து, உயில் போன்ற விஷயங்கள், அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியாக பின்பற்றப்படும். சாதி, மதம் போன்ற கட்டுக்குள் அந்த சட்டத்தை கட்டுப்படுத்திவிட முடியாது.

இன்றைய நிலையில், விவாகரத்து, நிலம், சொத்து என பலவிதமான சட்டங்கள் தனித்தனியாக இருந்தாலும், அவை ஒவ்வொரு மதங்களுக்கும் ஏற்றாற்போல் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதால் இதெல்லாம் நடக்காது. அரசியலமைப்பின் 144வது பிரிவான பொது சிவில் சட்டத்துடன் தொடர்புடையது. அனைவருக்கும் ஒரே சட்டம் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் இது உறுதியாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவை அவசியமானதாகக் கருதப்படவில்லை.

ஆதரவும், எதிர்ப்பும்…
பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், பாலின சமத்துவத்தை அதிகரிக்கும். சாதி, மதத்தின் பெயரால் தற்போது நடக்கும் பாகுபாடுகள் குறையும் என்று பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவான குரல்கள் ஒலிக்கப்படுகின்றன. இது தவிர, தற்போது நடைமுறையில் உள்ள ஆயிரக்கணக்கான சட்டங்களும் வெகுவாகக் குறைக்கப்படும். நீதித்துறை விசாரணைகள் எளிமையாகும். ஆனால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதால், மத சுதந்திரம் பறிக்கப்படும் என்று வாதிடுகின்றனர்.

பொது சிவில் சட்டத்தின் வரலாறு என்ன?
பொது சிவில் சட்டத்தின் வரலாற்றை பார்க்கும் போது, இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு முன்பிருந்தே பேசப்பட்டு வருகிறது. கடந்த 1835ம் ஆண்டில், அப்போது இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் அவசியம் என்று கூறினர். அப்போது அளிக்கப்பட்ட அறிக்கையில், குற்றம், ஆதாரம், ஒப்பந்தம் போன்ற விஷயங்களில் பொதுச் சட்டம் இருக்க வேண்டும். ஆனால் மதம் சார்ந்த தனிப்பட்ட சட்டத்தை சீர்குலைக்கக் கூடாது என்று கூறப்பட்டது. அப்போதிருந்தே பொது சிவில் சட்டம் என்பது வெறும் விவாதப் பொருளாகவே உள்ளது.

பாஜக ஏன் ஆதரிக்கிறது?
கடந்த பல ஆண்டுகளாக பாஜக தனது தேர்தல் அறிக்கையில், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதியை முன்வைத்து வருகிறது. உத்தரகாண்ட், குஜராத் போன்ற மாநிலங்களிலும் இதற்கான கட்டமைப்பை உருவாக்கும் பணி துவங்கியுள்ளது. பாஜகவின் நோக்கம், மத ரீதியிலான சட்டங்களை முடக்க முடியும் என்றும், அதன் மூலம் பெரும்பான்மையின அரசியலை எளிதாக கைப்பற்ற முடியும் என்று நம்புகிறது. அதன் ஒருபகுதியாக தான் முஸ்லிம் பெண்களுக்கான முத்தலாக்கை பாஜக எதிர்த்து வந்தது. சட்டத்தின் மூலம் முத்தலாக்ைக முடிவுக்கு கொண்டு வந்தது.

எந்ததெந்த நாடுகளில் பொருந்தும்?
பாகிஸ்தான், வங்கதேசம், மலேசியா, துருக்கி, இந்தோனேசியா, சூடான், எகிப்து போன்ற நாடுகள் ெபாது சிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ளன. வளர்ந்த நாடுகளான பிரான்ஸ், அமெரிக்காவில் இச்சட்டம் அமலில் உள்ளது. அவர்களின் மதச்சார்பற்ற சட்டமானது, அனைவருக்கும் சமமாக பின்பற்றப்படுகிறது. எனவே அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது பொது சிவில் சட்டம் குறித்த கருத்து கேட்பை ஒன்றிய பாஜக அரசு கோரியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தி கோயில், முத்தலாக் சட்டம், புதிய கல்விக் கொள்கை, குடியுரிமை சட்டம் போன்றவை பாஜகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளவை.

அதே வரிசையில் பொது சிவில் சட்டமும் உள்ளதால், லோக்சபா தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னதாக இதுகுறித்த விவாதத்தை பொதுவெளியில் பாஜக முன்வைத்துள்ளது. இவையாவும் பாஜகவின் அரசியல் நகர்வுகளாகவே பார்க்கப்படுகிறது.

The post அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொது சிவில் சட்டத்தை பாஜக கையில் எடுத்திருப்பது ஏன்?.. பின்னணி அரசியல் குறித்து எழும் பரபரப்பு கேள்விகள் appeared first on Dinakaran.

Related Stories: