புதுவிதமான மொபைல் செயலியால் பணம் பறிக்கும் கும்பல்: தடை செய்ய கோரிக்கை

நெல்லை: இன்றைய காலகட்டத்தில் செல்போன் என்பது தவிர்க்க முடியாத ஆறாவது விரலாக உள்ளது. செல்போனின் வருகையால் தகவல் தொழில்நுட்பத்தின் வேகம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஏராளமான நல்ல விஷயங்கள் இருந்தாலும் தீமைகள் இல்லை என்று சொல்ல முடியாது. அத்தகைய செல்போனை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துவோரை விட தீய பழக்கத்திற்கு பயன்படுத்தி அதில் ஆட்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உதாரணமாக ரம்மி போன்ற விளையாட்டு செயலிகளால் இளைஞர்கள், மாணவர்கள் பலியாகி உள்ளனர். அதே போன்று ப்ளூ வேல் விளையாட்டு மூலமும் இளைஞர்கள் பலர் தங்களது உயிரை மாய்த்துள்ளனர்.

எனவே, தான் ரம்மி செயலிக்கும், ப்ளூ வேல் விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இது போன்று வெவ்வேறு பாதிப்பு செயலியால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு தான் வருகின்றனர். இந்நிலையில் தற்போது இளைஞர்கள் மத்தியில் ‘கிரைண்டர் ஆப்’ என்ற செயலி வேகமாக பரவி வருகிறது. இது ஓரின சேர்க்கையாளர்களுக்கான செயலி என்று கூறப்படுகிறது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்கின்றனர். அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு வரவைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டி அவர்களிடமிருந்து பணம், செல்போன் மற்றும் நகைகளை பறித்து கொள்கின்றனர், சமீபத்தில் வியாபார விஷயமாக புளியங்குடி வந்த வியாபாரி இந்த மொபைல் செயலி மூலமாக ஈர்க்கப்பட்டு காட்டுப்பகுதிக்கு செல்கையில் அங்கு மறைந்து இருந்த மர்ம நபர்களால் மிரட்டப்பட்டு லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்துள்ளார்.

ஆனால், இது தொடர்பாக வெளியில் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார். ஆனால், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிந்து சம்பந்தப்பட்ட மோசடி பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுத்தனர். இதே போன்று இச்செயலியால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரும் வெளியில் சொல்ல முடியாமல் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஆகவே இது போன்ற மாணவர்கள், இளைஞர்கள் வாழ்க்கையை கெடுக்கும் செயலியை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post புதுவிதமான மொபைல் செயலியால் பணம் பறிக்கும் கும்பல்: தடை செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: