புதுச்சேரியில் அமலாக்கத்துறை பெயரில் மோசடி ரெய்டுக்கு வந்த முறுக்கு வியாபாரி பணத்தை இழந்த எம்எல்ஏக்கள்: திருவொற்றியூரை சேர்ந்தவர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜ, காங்கிரஸ், சுயேச்சை எம்எல்ஏக்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரி என்று கூறி ரெய்டுக்கு போன சென்னையை சேர்ந்த முறுக்கு வியாபாரி கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஏற்கனவே இதேபோல மோசடி ரெய்டு நடத்தி எம்எல்ஏக்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்தது அம்பலமாகியுள்ளது. புதுச்சேரி உழவர்கரை தொகுதி பாஜ ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ சிவசங்கரன். இவரது வீடு ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகர் முதலாவது குறுக்கு தெருவில் உள்ளது. இவர், வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவராகவும் உள்ளார். கடந்த 21ம் தேதி மாலை 5.50 மணியளவில் அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், ‘அமலாக்கத்துறை அதிகாரி பேசுகிறேன், உங்களிடம் முக்கியமான விஷயம் பற்றி பேச வேண்டும், முகவரியை கூறுங்கள்’ என கேட்டு பெற்றுள்ளார். அதற்கு எம்எல்ஏ., சரி வாருங்கள் என அழைத்துள்ளார். அதன்படி போன் செய்த நபர், 6 மணியளவில் சிவசங்கரன் எம்எல்ஏவின் வீட்டுக்கு தனி ஆளாக ஸ்கூட்டரில் வந்தார். அவரை எதிர்பார்த்து காத்திருந்த எம்எல்ஏ வீட்டுக்குள் அழைத்து சென்றார். அப்போது அவர், ‘நீங்கள் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தகவல் வந்திருக்கிறது, வழக்கு இல்லாமல் செய்வதற்கு எனக்கு ரூ. 1 லட்சம் கொடுங்கள் போதும்’ என்று கூறியுள்ளார். உடனே அவரது அடையாள அட்டையை எம்எல்ஏ கேட்டார். அதற்கு அவர், ‘அதெல்லாம் தன்னிடம் இல்லை’ என கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த எம்எல்ஏ ரெட்டியார்பாளையம் போலீஸ் மற்றும் தனது ஆடிட்டருக்கு தகவல் தெரிவித்தார். போலி அதிகாரி என தெரியவந்ததும் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் அவருக்கு தர்மஅடி கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த போலீசாரிடம் அந்த நபரை ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர், சென்னை திருவொற்றியூர், பெரியார் நகரை சேர்ந்த வரதராஜன் (35), முறுக்கு வியாபாரி என தெரியவந்தது. சிவசங்கரன் எம்எல்ஏ வீட்டுக்கு வருவதற்கு முன்பு, காலாப்பட்டு தொகுதி பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் வீட்டுக்கு சென்று, அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் அவர் பணம் தர முடியாது என மறுத்துள்ளார். தொடர்ந்து, லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்ல்ஏ வைத்தியநாதன் வீட்டுக்கும் சென்றுள்ளார். அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து, பணப்பரிமாற்றம் செய்துள்ளீர்கள் எனவும், அதனை சரிசெய்ய ரூ. 1 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் 2 நாளில் அதிகாரிகள் குழுவினர் ரெய்டுக்கு வருவார்கள் என கூறியுள்ளார்.

அவரும் பணம் தர மறுக்கவே சிவசங்கரன் வீட்டுக்கு வந்து சிக்கியுள்ளது தெரிய வந்தது. வரதராஜன் சில நாட்களுக்கு முன் குடும்பத்துடன் புதுச்சேரி வந்து உருளையன்பேட்டையில் ஒரு அபார்ட்மெண்டில் வாடகைக்கு தங்கியுள்ளார். வரதராஜனின் செல்போனை போலீசார் கைப்பற்றி விசாரித்தபோது தமிழக அரசியல்வாதிகளுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அதிகளவில் இருப்பதை கண்ட போலீசார், அதன்பேரிலும் விசாரித்தனர். இதில், தமிழகம் மற்றும் புதுவை எம்எல்ஏக்களிடம் அமலாக்கத்துறை அதிகாரி எனும் பெயரில் ஏற்கனவே லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதும், இதேபோல் சில அரசியல்வாதிகளையும் ஏமாற்றியிருப்பதும் அம்பலமானது.

The post புதுச்சேரியில் அமலாக்கத்துறை பெயரில் மோசடி ரெய்டுக்கு வந்த முறுக்கு வியாபாரி பணத்தை இழந்த எம்எல்ஏக்கள்: திருவொற்றியூரை சேர்ந்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: