லண்டன்: இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் ஒரு நடன பள்ளியில் 3 சிறுமிகள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர். கடந்த 29ம் தேதி நடந்த கொலை சம்பவத்தில் 17 வயது சிறுவனை காவல்துறை கைது செய்தது. ஆனால் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர் இங்கிலாந்தில் அகதியாக குடியேறியவர் என சமூக வலைதளங்களில் தவறாக செய்தி பரவியது. புலம் பெயர்ந்தோருக்கு எதிராக நாடு முழுவதும் தீவிர வலதுசாரியினர் தொடர் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில், “இங்கிலாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரத்தை அனைவரும் அறிவீர்கள்.
இந்த நிலவரத்தை இந்திய தூதரகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் கவனமுடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட அறிவுறுத்தப்படுகின்றனர். உள்ளூர் செய்திகள், பாதுகாப்பு அதிகாரிகள் தரும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். வன்முறை நடக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிகளுக்கு இந்திய தூதரகத்தை நாட விரும்புவோருக்கு தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியும் வௌியிடப்பட்டுள்ளது.
The post இங்கிலாந்து வரும் இந்தியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்: இந்திய தூதரகம் எச்சரிக்கை appeared first on Dinakaran.