பெண் ஊழியர்களின் போட்டோ மூலம் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி வாலிபர்களிடம் ‘செக்ஸ் சாட்டிங்’ செய்து வந்த ஐடி ஊழியர் கைது: 100 பெண்களின் புகைப்படங்கள் அடங்கிய செல்போன் பறிமுதல்

சென்னை: ‘லவ் டுடே’ திரைப்பட பாணியில் தன்னுடன் பணியாற்றும் சக பெண் ஊழியர்களின் புகைப்படங்களை வைத்து போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி, பெண்களை போல வாலிபர்களிடம் மெசஞ்ஜரில் நள்ளிரவுகளில் செக்ஸ் சாட்டிங் செய்து வந்த ஐடி ஊழியரை சைபர் க்ரைம் போலீசார் கைது ெசய்தனர். அவரிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை போரூரில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், சென்னை மாநகர தெற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார்.

அந்த புகாரில், என்னுடன் பணியாற்றும் சக தோழியின் பிறந்த நாள் அன்று, அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினோம். அப்போது நான் மற்றும் எனது தோழியுடன் இருக்கும்போது வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து, எனது பெயரில் புகைப்படத்துடன் போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி, அதில் எனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் யாரோ பதிவு செய்துள்ளனர். மேலும், பேஸ்புக் மெசஞ்சரில் வாலிபர்களுக்கு ஆபாசமாக நான் அனுப்பியதுபோல குறுஞ்செய்தி அனுப்பி உள்ளனர். எனவே அந்த மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் மீது தெற்கு மண்டல சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான குழுவினர், போலி பேஸ்புக் கணக்கை வைத்து விசாரணை நடத்தினர். அதில், புகார் அளித்த பெண் ஊழியருடன் பணியாற்றும் திருவொற்றியூரை சேர்ந்த தமிழ்மாறன்(23) என்பவர், புகார் அளித்த பெண் ஊழியரின் புகைப்படத்தை வைத்து போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி அதன் மூலம் மெசஞ்சரில் நள்ளிரவில் வாலிபர்களிடம் ‘செக்ஸ் சாட்டிங்’ செய்து வந்துள்ளார். அதைதொடர்ந்து சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கவிதா, ஐடி ஊழியர் தமிழ்மாறனை பிடித்து விசாரணை நடத்தினார்.

அப்போது அவரது செல்போனில், சக பெண் தோழியின் பிறந்த நாளை பயன்படுத்தி, கேக் வெட்டிய சக பெண் ஊழியர்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். அதேபோல், சக பெண் ஊழியர்கள் அலுவலகத்தில் உணவு இடைவேளையில் சாப்பிடும் போது அவர்களுக்கு தெரியாமல் பல கோணங்களில் ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்துள்ளார். அந்த வகையில் தன் ஆபிசில் வேலை செய்யும் 100க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக படம் எடுத்தது விசாரணையில் தெரியவந்தது. அத்துடன், சில பெண் ஊழியர்களின் புகைப்படங்களை வைத்து போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி அதன் மூலம் தனக்கு பிடித்த வாலிபர்களிடம் நள்ளிரவில் ‘செக்ஸ் சாட்டிங்’ செய்துள்ளார்.

அதைதொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் ஐடி ஊழியர் தமிழ்மாறன் மீது வழக்கு பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும், 100க்கும் மேற்பட்ட பெண் ஐடி ஊழியர்களின் ஆபாச புகைப்படங்கள் வைத்திருந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. பெண் ஊழியர்களை மிரட்டி பணம் ஏதேனும் பறித்துள்ளாரா அல்லது தவறாக நடந்து கொண்டாரா என்பது குறித்தும் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

The post பெண் ஊழியர்களின் போட்டோ மூலம் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி வாலிபர்களிடம் ‘செக்ஸ் சாட்டிங்’ செய்து வந்த ஐடி ஊழியர் கைது: 100 பெண்களின் புகைப்படங்கள் அடங்கிய செல்போன் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: