எடப்பாடி அருமை தெரியவில்லை என பேட்டியளித்த விவகாரம்: அரசியல் விஞ்ஞானிக்கு பதில் சொல்ல முடியாது: அண்ணாமலை; அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி: செல்லூர் ராஜூ

மதுரை: எடப்பாடி அருமை தெரியவில்லை என செல்லூர் ராஜூ கூறியதற்கு, ‘அரசியல் விஞ்ஞானிக்கு பதில் சொல்ல முடியாது’ என்று அண்ணாமலை பதிலடி கொடுத்து உள்ளார். இதற்கு பதிலளித்து உள்ள செல்லூர் ராஜூ, ‘அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி’ என்று கடுமையாக விமர்சித்து உள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்றுமுன்தினம் அளித்த பேட்டியில், ‘‘அண்ணாமலை பாஜவின் மாநில தலைவர். அவ்வளவு தான். எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் மோடி.

மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். செல்லூர் ராஜூவின் இந்தக் கேள்விக்கு, சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் ேநற்றுமுன்தினம் இரவு தனது நடைபயணத்தின் போது அண்ணாமலை பதிலடி கொடுத்தார். செல்லூர் ராஜூவின் பேட்டி குறித்து கேட்டபோது அண்ணாமலை கூறுகையில், ‘‘யாருக்கு பதில் சொல்ல வேண்டும் என ஒரு தரம் இருக்கிறது. சில பேர் விஞ்ஞானிகளாகவும், அரசியல் விஞ்ஞானிகளாகவும் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை’’ என்று அதிரடியாக கூறியது, மீண்டும் அதிமுகவினரை டென்ஷனாக்கி இருக்கிறது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று அண்ணாமலை என்னை கூறுகிறார். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். கட்சியில் சேர்ந்து ஒரு ஆண்டில் தலைவராக பதவியேற்று இருக்கிறார். ஆனால் நான் அப்படி அல்ல. ஆரம்பத்தில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர், வட்டச் செயலாளர், பகுதி செயலாளர், மாவட்டச் செயலாளர் ஆனேன்.

அதேபோல் மக்கள் பதவிகளில் கவுன்சிலர், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர், அதன்பின் அமைச்சர் ஆனேன். இன்றைக்கு அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பதவி வகிக்கிறேன். எனக்கு எல்லா பதவிகளும் படிப்படியாக தான் வந்தது. என்னை பொறுத்தவரை அண்ணாமலையின் கருத்துக்களை நான் பொருட்படுத்துவதில்லை. நீங்களும் அதனை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம். நான் ஏற்கனவே தெளிவாக கூறியிருக்கிறேன், எங்கள் மீது துரும்பு எறிந்தால் கூட நாங்கள் பதிலுக்கு இரும்பை வீசுவோம். தமிழக அரசியலில் தங்களுக்கான இடம் என்ன என்பதனை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

* கொடுத்த மனு தெருவுக்கு போனதால் பெண் வேதனை திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதியில், அண்ணாமலை நேற்று முன்தினம் மாலை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது நான்கு ரோடு சந்திப்பில் திருப்புத்தூர் தாய்வீடு மகளிர் குழுவைச் சேர்ந்த ரமா என்பவர் அண்ணாமலையிடம் மகளிர் குழுக்களின் பிரச்னைகள் குறித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தார். அந்த மனுவில், ‘‘தனியார் நிறுவனங்களில் வாங்கிய கடன்களை கட்டுவதற்கு வழி இல்லாமல் இருக்கிறோம் என்பதால், அதனை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார். சிறிது நேரம் கழித்து ரமா கொடுத்த கோரிக்கை மனு பெரிய கடைவீதி சாலையில், தெரு ஓரமாகக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலையிடம் மக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு அளிக்கப்படும் மரியாதை இதுதானா என அப்பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

* திருடர்கள் ஜாக்கிரதை
அண்ணாமலை கடந்த 2ம் தேதி இரவு அறந்தாங்கியில் பாதயாத்திரையில் கலந்து கொண்டார். இதில் அக்கட்சியின் அறிவுசார் பிரிவின் முன்னாள் தலைவர் அர்ஜுன மூர்த்தியும் கலந்து கொண்டார். கூட்ட நெரிசலில் அவர் வைத்திருந்த பர்ஸை மர்ம நபர் திருடி விட்டார். அந்த பர்சில் 4 கிரெடிட் கார்டுகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம், ஆதார் கார்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அர்ஜுன மூர்த்தி அறந்தாங்கி போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து அர்ஜுன மூர்த்தி தனது டிவிட்டரில், ‘அண்ணாமலை நடைப்பயணத்தில் பங்கேற்கும் பாஜவினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என பதிவிட்டிருந்தார்.

* அண்ணாமலை மீது பாய்ந்த காளை ‘பாரத் மாதா கி ஜே’ என கோஷம்
அண்ணாமலை நேற்று காலை 10.30 மணிக்கு மதுரை மாவட்டம் மேலூர் அரசு கலைக்கல்லூரியில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்கினார். முன்னதாக, ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காளைகளில் ஒன்றுக்கு மஞ்சள் சால்வை அணிவித்து, அதற்கு வாழைப்பழம் அளித்தார். அப்போது கூடி இருந்த தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்ப, மிரண்டு போன காளை, அண்ணாமலை மீது சீறி பாய்ந்தது. இதனால் அவர் மிரண்டு சில அடிகள் பின் வாங்கினார். காளை மிரண்டதை கண்ட அவரது பாதுகாவலர்கள் மற்றும் தொண்டர்கள் சிதறி ஒடினர். அப்போது அங்கிருந்த தொண்டர்கள் பாரத் மாதா கி ஜே என்று கோஷம் எழுப்பினர். பின்னர் காளையின் உரிமையாளர் காளையை சமாதானப்படுத்தினார்.

The post எடப்பாடி அருமை தெரியவில்லை என பேட்டியளித்த விவகாரம்: அரசியல் விஞ்ஞானிக்கு பதில் சொல்ல முடியாது: அண்ணாமலை; அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி: செல்லூர் ராஜூ appeared first on Dinakaran.

Related Stories: