மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி பொங்கல் விழா கொண்டாட்டம்


ஓமலூர்: ஓமலூரில் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் விழாவை கொண்டாடினார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள திண்டமங்கலம் ஊராட்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, பாலிகடை பகுதியிலிருந்து மாட்டு வண்டியில் எடப்பாடி பழனிசாமி ஊர்வலமாக விழா நடந்த இடத்திற்கு வந்தார். அங்கு 150க்கும் மேற்பட்ட புதுப்பானைகளில் பொங்கல் வைத்து விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தை பிறந்தால் வழிபிறக்கும் என்று முன்னோர்கள் கூறிய தை பிறந்துள்ளது. இனி மக்களுக்கு நல்ல வாழ்வு அமையும். நானும் ஒரு விவசாயி தான், வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடும்போது எப்படி மகிழ்ச்சி ஏற்படுமோ, அதேபோன்று தற்போது மகிழ்ச்சியை அடைந்துள்ளேன்.

கிராமத்தில் பிறந்து வாழ்ந்தவர்களுக்கு தான் தைத்திருநாளின் அருமை தெரியும். நாட்டின் முதுகெலும்பாக இருப்பது கிராமங்கள்தான். நாட்டு மக்களுக்காக உணவை தயாரிக்கின்ற விவசாயிகளின் தைத்திருநாள் என்பதால் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவை சேர்த்து 40 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். தை பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுவதுபோல தேர்தல் வெற்றியை நாம் கொண்டாடும் காலம் வந்து விட்டது. சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. இந்தியாவிலேயே அதிகமான வாக்கு எண்ணிக்கையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி பொங்கல் விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: