கீவ்: உக்ரைன் மீது ஒரேஇரவில் நூற்றுக்கணக்கான டிரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யாவின் முக்கிய விமானப்படை தளம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கிய மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை உக்ரைனின் கிமெல்னிட்ஸ்கி, கீவ் உள்ளிட்ட நகரங்கள் மீது 322 டிரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதில் 157 டிரோன்களை உக்ரைனின் வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் 135 டிரோன்கள் மாயமானதாக தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி தரும் விதமாக ரஷ்யாவின் முக்கிய விமானப்படை தளம் மீது உக்ரைன் தாக்கியது. இதுகுறித்து உக்ரைன் ராணுவ தளபதி கூறுகையில், “ரஷ்யாவின் நூற்றுக்கணக்கான டிரோன் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக ரஷ்யாவின் வோரோனேஜ் பிராந்தியத்தில் உள்ள போரிசோக்சோக்லெப்ஸ்க் விமானப்படை தளத்தை உக்ரைன் ராணுவம் தாக்கியது” என்று தெரிவித்தார். உக்ரைன் தாக்குதல் பற்றி ரஷ்யா எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
The post டிரோன் தாக்குதலுக்கு பதிலடி ரஷ்யாவின் விமானப்படை தளத்தை அழித்த உக்ரைன் appeared first on Dinakaran.