டெல்லியில் ஷாங்காய் கூட்டமைப்பு மாநாடு; சீன பாதுகாப்பு அமைச்சர் இந்தியா வருகை: இருநாட்டு மோதலுக்கு மத்தியில் முதன்முறையாக சந்திப்பு

புதுடெல்லி: டெல்லியில் நடைபெறும் ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபு நாளை இந்தியா வருகிறார். இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்னை காரணமாக இரு நாடுகளுக்கிடையிலான உறவு பாதித்துள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ல் இரு ராணுவங்களுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமடைந்தது.

இருதரப்பு பதற்றத்தை தணிக்கும் பொருட்டு, இந்தியா – சீன ராணுவத் தளபதிகளுக்கு இடையே 19 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அதன்பின், முதல் முறையாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபும் சந்தித்து பேசுகின்றனர். இதற்காக சீன அமைச்சர் லீ ஷாங்ஃபு நாளை இந்தியா வருகிறார். பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு, ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகளில் தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

நாளையும், நாளை மறுநாளும் தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஷாங்காய் கூட்டமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்ளும் போது இருநாட்டு எல்லைப் பிரச்னை குறித்து சீன அமைச்சர் ஏதேனும் கருத்து கூறுவாரா? என்ற எதிர்ப்பு அதிகரித்துள்ளது. ஷாங்காய் கூட்டமைப்பு என்பது சீனா, இந்தியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது என்பதால், அந்த நாடுகளின் அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post டெல்லியில் ஷாங்காய் கூட்டமைப்பு மாநாடு; சீன பாதுகாப்பு அமைச்சர் இந்தியா வருகை: இருநாட்டு மோதலுக்கு மத்தியில் முதன்முறையாக சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: