ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், பச்சையம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (46). காலை நேரங்களில் காய்கறி விற்பனை செய்யும் இவர் மற்ற நேரங்களில் பேக்கரி, ஓட்டல்களில் சமையல் வேலை, பேக்கரி உணவு பொருள்கள் தயார் செய்து கொடுத்தல் என பல வேலைகளையும் செய்து வந்தார். இவரது மனைவி ஹசீனா (39). இவர்களது மகள்கள் ஆயிஷா பாத்திமா (16), ஜனா பாத்திமா (14). மூத்த மகள் 11ம் வகுப்பும், 2வது மகள் 8ம் வகுப்பும் படித்து வந்தனர்.
ஜாகீர் உசேனுக்கு கடன் பிரச்னையால் அடிக்கடி மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் பணிக்கு சென்ற ஜாகீர் உசேன் நேற்று மாலை தனது மனைவி ஹசீனாவுக்கு போன் செய்தபோது அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து, ஜாகீர் உசேன் பக்கத்து வீட்டினருக்கு போன் செய்து தனது மனைவியிடம் போனை எடுத்து பேச சொல்லுமாறு கூறியுள்ளார். அவர்கள் சென்று வீட்டில் பார்த்தபோது, கட்டிலில் இறந்த நிலையில் 2 மகள்களும், பக்கத்து அறையில் ஹசீனா தூக்கில் தொங்கிய நிலையிலும் கிடந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டினர், அது குறித்து ஜாகீர் உசேனுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த கருங்கல்பாளையம் போலீசார் 3 பேரின் சடலங்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், நேற்று காலை ஜாகீர் உசேனுக்கும், ஹசீனாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் ஜாகீர் உசேன் வெளியே சென்றுவிட்டார். சண்டையால் மனவேதனையில் ஹசீனா, 2 மகள்களுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, பக்கத்து அறைக்கு சென்று அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் ஹசீனாவும், அவரது மகள்களும் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளனர். உருது மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில் 2 மகள்களும், ‘‘எங்கள் தந்தையை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். அவரை மது அருந்தக்கூடாது என கூறுங்கள்’’ என்று எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
The post குடும்ப தகராறில் விபரீதம்; 2 மகள்களை கொன்று தாய் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது appeared first on Dinakaran.