மருமகள் வரதட்சனை புகாரின் பேரில் வழக்கு மேட்டூர் பாமக எம்எல்ஏவிடம் சேலம் போலீசார் விசாரணை: 250 கேள்விகளுடன் மகனிடம் கிடுக்கிப்பிடி

சேலம்: மருமகள் கொடுத்த புகாரின்பேரில் மேட்டூர் பாமக எம்எல்ஏவிடம் 70 கேள்விகளையும், மகனிடம் 250 கேள்விகளுக்கு மேல் கேட்டும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி பாமக எம்எல்ஏ சதாசிவம். இவரது மருமகள் மனோலியா கொடுத்த வரதட்சணை புகாரின்பேரில் சூரமங்கலம் மகளிர் போலீசார் சதாசிவம் எம்எல்ஏ, அவரது மகன் சங்கர், மனைவி பேபி, மகள் கலைவாணி ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற சம்மனை போலீஸ் ஸ்டேசன் சென்று பெற்றுக்கொண்ட சதாசிவம் எம்எல்ஏ கடந்த 1ம் தேதி ஆஜராவதாக கூறிச் சென்றார். ஆனால், ஆஜராகாத அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி 4ம் தேதி (நேற்று) காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும், போலீசாரின் அறிக்கையின் அடிப்படையில் 7ம் தேதி உத்தரவு வழங்கப்படும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று காலை 11 மணியளவில் சதாசிவத்தின் மனைவி பேபி, மகள் கலைவாணி ஆகியோர் காவல்நிலையத்தில் ஆஜராகினர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் சசிகலா 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இதையடுத்து பகல் 3 மணி அளவில் சதாசிவம் எம்எல்ஏ. அவரது மகன் சங்கர் ஆகியோர் வந்தனர். இதில் சதாசிவம் எம்எல்ஏவிடம் 70க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது. அவரது மகன் சங்கரிடம் 250க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இதனை போலீசார் கம்ப்யூட்டரில் பதிவு செய்தனர். இந்த விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிறகு முன்ஜாமீன் மனு மீதான முடிவு தெரியும் என போலீசார் தெரிவித்தனர்.

The post மருமகள் வரதட்சனை புகாரின் பேரில் வழக்கு மேட்டூர் பாமக எம்எல்ஏவிடம் சேலம் போலீசார் விசாரணை: 250 கேள்விகளுடன் மகனிடம் கிடுக்கிப்பிடி appeared first on Dinakaran.

Related Stories: