ஆபத்தான நிலையில் இருந்த பாசன வாய்க்கால் மதகு பாலங்கள் சீரமைப்பு

 

முத்துப்பேட்டை,ஆக.28: தினகரன் செய்தி எதிரொலியாக ஆபத்தான நிலையில் இருந்த பாசன வாய்க்கால் மதகு பாலங்கள் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து ஓவரூர் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
ஓவரூர் கிராமத்திற்கு திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டைக்கு இடையே உள்ள ஈசிஆர் சாலையில் பாண்டி கோட்டகத்தில் இருந்து இந்த சாலை பிரிந்து செல்கிறது. இவ்வழியாக இந்த கிராமம் மட்டுமின்றி, தொடர்ச்சியாக உள்ள கிராமங்களுக்கும் முக்கிய சாலையாக இந்த சாலை உள்ளது. இந்த வழியாக தான் இந்த கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் வந்து சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் உட்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் மாரியம்மன் கோயில் அருகில், தெற்குபாவகுளம் அருகே என 4 இடங்களில் சாலையின் குறுக்கே பாசன வாய்க்கால் மதகு பாலங்கள் உள்ளன.

இந்த மதகு பாலங்கள் அமைத்து சுமார் 40வருடங்களுக்கு மேலாக உள்ளது. தற்போது இந்த 4 மதகு பாலங்களும் விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் உள்வாங்கி சாலை சேதமாக வாய்ப்புகள் உள்ளது. ஆபத்தான நிலையில் இந்த மதகு பாலங்களை சீரமைத்து தர வேண்டும் என்று சுட்டிக்காட்டி கடந்த 10.08.2023 தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்நிலையில் அவர்கள் மதகு பாலங்களை சீரமைக்க உத்தரவிட்டனர். அதன்படி சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

The post ஆபத்தான நிலையில் இருந்த பாசன வாய்க்கால் மதகு பாலங்கள் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: