ஐகோர்ட் கிளை உத்தரவின்பேரில் பழநியில் 500 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

பழநி: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின்பேரில், பழநியில் இன்று 500 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. அப்போது வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். முக்கிய பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். இந்நிலையில், கோயிலின் அடிவாரப் பகுதியில் வியாபாரிகள் ஏராளமான கடைகளை அமைத்துள்ளனர்.

தைப்பூசத் திருவிழா வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி பாதயாத்திரை பக்தர்கள் பழநி கோயிலுக்கு வர தொடங்கியுள்ளனர். இந்நிலையில், அடிவாரப் பகுதியில் சாலைகளை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து வியாபாரம் செய்வதால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக ராதாகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஆக்கிரமிப்பு அகற்றத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கவும் உத்தரவிட்டது.

ஐகோர்ட் கிளை உத்தரவின் பேரில் பழநியில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் கிரிவீதியிலும், நகராட்சி சார்பில் சன்னதி வீதிகளிலும் இன்று 500க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டன. ஒரு சில இடங்களில் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் சாலை பளிச்சென காட்சியளிக்கிறது.

The post ஐகோர்ட் கிளை உத்தரவின்பேரில் பழநியில் 500 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: