* அன்று அனைவரும் ஆஜராக நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவு
சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல் முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 25 பேர் சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். தமிழ்நாட்டில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக புகாரில் டெல்லி சிபிஐ காவல்துறை வழக்கை விசாரித்து வருகின்றது. இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் டிஜிபி , சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் , உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால் பிழையை சரி செய்து விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் ஆவணங்களுடன் தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிகளுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் பிழைகளை திருத்தம் செய்து 6 பேருடன் புதிதாக ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பெயர்களை இணைத்து தாக்கல் செய்யபட்டது. அதில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா என்ற பி.வெங்கடரமணா, முன்னாள் அமைச்சர் டாக்டர். சி,விஜய பாஸ்கர், அ.சரவணன், டாக்டர். லக்ஷ்மி நாராயணன், பி.முருகன் சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழ்நாடு அரசின் முன்னாள் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் ஆகிய 21 பேர் மீது கூடுதல் குற்றபத்திரிகையில் குற்றம் சாட்டபட்டுள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் மற்றும் இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2ம்தேதி எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 5 பேர் ஆஜராகி இருந்தனர். இதையடுத்து, வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தற்பொழுது தாக்கல் செய்யப்பட்டு புதிதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வழக்கில் சேர்க்கபட்டுள்ளது.
எனவே அனைவருக்கும் சம்மன் அனுப்புவதாகவும் அவர்கள் அனைவரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சஞ்சய் பாபா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், குட்கா சப்ளையர் மாதவராவ் உள்ளிட்ட 25 பேர் நேரில் ஆஜராகினர். அப்போது, அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் வக்காலத்து தாக்கல் செய்தனர். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட சிலர் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி வக்காலத்து தாக்கல் செய்யாதவர்கள் வரும் 23ம் தேதி வக்காலத்து தாக்கல் செய்ய வேண்டும். அன்று அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும். அப்போது குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
The post குட்கா முறைகேடு வழக்கு: மாஜி அமைச்சர்கள், டிஜிபிக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்; விசாரணை 23ம் தேதிக்கு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.