சூடானில் உள்நாட்டு போரில் சிக்கியுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 400 பேர் உட்பட இந்தியர்களை மீட்க ஒத்துழைப்பு தர தயார்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: சூடானில் உள்நாட்டு போர் காரணமாக சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 400 பேர் உட்பட இந்தியர்களை அழைத்து வரும் ‘ஆபரேஷன் காவேரி’ மீட்பு பணிக்கு, தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:
சூடானில் உள்நாட்டு போர் காரணமாக நிலவிய சிக்கலான நிலை தற்போது முன்னேற்றமடைந்து வரும் நிலையில், இந்திய குடிமக்கள் சூடானில் இருந்து விரைவாக வெளியேறுவதற்கு வசதியாக இந்திய விமானப்படை விமானம் மற்றும் கடற்படை கப்பல்கள் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த சுமார் 400 பேர் வரை சூடானில் சிக்கித் தவித்து வருகிறார்கள். அவர்கள் இந்தியாவுக்கு திரும்புவதற்கான உதவிகளை எதிர்பார்த்து இருப்பதை தங்கள் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்புகிறேன். சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் முதல் தொகுதி ஐ.என்.எஸ் சுமேதா என்ற கப்பலில் இருக்கும் நிலையில் அவர்களின் உறவினர்களிடம் இருந்து மாநில அரசுக்கு அவசர அழைப்புகள் வந்துகொண்டிருக்கிறது. மேலும் இது தொடர்பாக, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களை பெறுவதற்கும், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக வெளியேற்றுவதற்கும் அனைத்து உதவிகளையும் வழங்கவும், வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் சூடானில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து செயல்படவும் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது.

‘ஆபரேஷன் காவேரி’ மீட்பு பணியானது, சூடானில் சிக்கித் தவிக்கும் தங்கள் உற்றார் உறவினர்கள் பாதுகாப்பாக திரும்புவதற்காக காத்திருக்கும் அனைத்து இந்தியர்களின் குடும்பங்களுக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரும் என நான் நம்புகிறேன். சூடானில் இருந்து இந்திய குடிமக்களை வெளியேற்றும் முயற்சிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஒத்துழைப்பு வழங்க தயார் நிலையில் இருப்பதாக மீண்டும் உறுதிப்பட கூறிக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் கூறியுள்ளார்.

* விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சூடான் நாட்டில் நடைபெற்று வரும் ராணுவம் மற்றும் உள்நாட்டு படை பிரிவினர்களுக்கு இடையேயான மோதல்களினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்க கோரி அங்குள்ள தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கைகள் தொடர்ந்து வருவதன் அடிப்படையில் முதல்வர் ஆணைப்படி உடனடியாக அங்கு சிக்கியுள்ள தமிழர்களின் விவரங்களை பகிரக் கோரியும், அவர்களை பாதுகாப்பாக தமிழகம் மீட்க கோரியும் தமிழ்நாடு அரசின் சார்பாக கடிதம் மூலம் சூடான் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் கோரப்பட்டுள்ளது.

மேலும், சூடானில் உள்ள தமிழர்களுடன் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாக தொடர்புகள் உருவாக்கப்பட்டு அவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் சூடானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப்படுகிறது.
தற்போது ஒன்றிய அரசின் ‘ஆப்ரேசன் காவிரி’ என்ற திட்டத்தின் மூலமாக சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு, சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவிற்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி மற்றும் மும்பைக்கு அழைத்து வரக்கூடிய பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

ரஷ்யா-உக்ரைன் போரின்போது, விமானம் மூலம் டெல்லி மற்றும் மும்பைக்கு மீட்கப்பட்ட தமிழர்களை, தமிழ்நாடு அரசின் செலவில் தமிழகத்தில் உள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்லப்பட்டது போன்று இந்நேர்விலும் நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் டெல்லி தமிழ்நாடு இல்லத்திலும், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையரகம், சென்னையிலும் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது.

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு விவரங்கள்: 011-2419 3100, 9289516711, tnhouse@nic.in மற்றும் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையரகம், சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு விவரங்கள்: 91-96000 23645, nrtchennai@gmail.com. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சூடானில் உள்நாட்டு போரில் சிக்கியுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 400 பேர் உட்பட இந்தியர்களை மீட்க ஒத்துழைப்பு தர தயார்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: