கர்நாடக சட்டசபை தேர்தல் எதிரொலியாக வர்த்தக சிலிண்டர் விலை ரூ.171 குறைப்பு: சென்னையில் ரூ.2,021.50 ஆக நிர்ணயம்; வீட்டு உபயோக காஸ் விலை 2 மாதமாக மாற்றமில்லை

சேலம்: கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் எதிரொலியாக, 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ரூ.171 குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 2வது மாதமாக வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையும், காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் சிலிண்டர் விலை ரூ.1100ஐ தாண்டியது. மேலும், வர்த்தக சிலிண்டர் விலை ரூ.351 அதிகரிக்கப்பட்டதால், சென்னையில் ரூ.2,268, சேலத்தில் ரூ.2221 ஆகவும், டெல்லியில் ரூ.2119.50, மும்பையில் ரூ.2071.50, கொல்கத்தாவில் ரூ.2221.50 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனிடையே, கர்நாடக மாநில தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. மேலும், வர்த்தக சிலிண்டர் விலை ரூ.75 முதல் ரூ.92 வரை குறைக்கப்பட்டது.

இந்நிலையில், இம் மாதத்திற்கான புதிய விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நேற்று அறிவித்தது. அதன்படி, தொடர்ந்து 2வது மாதமாக, வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. இதனால், கடந்த மார்ச் மாத விலையான சென்னையில் ரூ.1,118.50, சேலத்தில் ரூ.1,136.50, டெல்லியில் ரூ.1,103, கொல்கத்தாவில் ரூ.1,129, மும்பையில் ரூ.1,102.50 ஆகவே உள்ளது. அதேவேளையில், வர்த்தக சிலிண்டருக்கான விலை சென்னையில் ரூ.171ம், டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் ரூ.171.50ம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2,021.50 எனவும், சேலத்தில் ரூ.1,970 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வீட்டு உபயோக காஸ் சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 2வது மாதமாக தற்போதும் எந்தவித விலை மாற்றமும் செய்யப்படவில்லை. கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தான் இதற்கான காரணம் என கூறப்படுகிறது. அம்மாநிலத்தில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு வந்துள்ளது. இந்த நேரத்தில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தினால், அது தேர்தலில் எதிரொலிக்கும் என அஞ்சியே, வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதே சமயம், கர்நாடகாவில் வரும் 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 13ம்தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. அதன் பின்னர், இம்மாதத்திலேயே காஸ் விலையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கர்நாடக சட்டசபை தேர்தல் எதிரொலியாக வர்த்தக சிலிண்டர் விலை ரூ.171 குறைப்பு: சென்னையில் ரூ.2,021.50 ஆக நிர்ணயம்; வீட்டு உபயோக காஸ் விலை 2 மாதமாக மாற்றமில்லை appeared first on Dinakaran.

Related Stories: