துணிக்கடை கலெக்‌ஷன் பணம் ₹1.50 லட்சம் வழிப்பறி நாடகம்: ஊழியர், நண்பர் சிக்கினர்

பெரம்பூர்: அயனாவரத்தில் ₹1.50 லட்சம் வழிப்பறி செய்த விவகாரத்தில் கடை ஊழியரே திட்டம் போட்டு அபேஸ் செய்தது அம்பலமாகியுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த நண்பரும் கைதானார். அயனாவரம் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் மகேந்தர் (33), வண்ணாரப்பேட்டையில் உள்ள துணிக்கடையில் 10 வருடங்களாக வேலை செய்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் இரவில் போரூரில் உள்ள துணிக் கடைக்குச் சென்று கலெக்ஷன் பணத்தை வசூல் செய்துவிட்டு, அயனாவரம் நியூ ஆவடி ரோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரது பைக் பழுதாகி நின்றுவிட்டது. அவ்வழியாக மற்றொரு பைக்கில் வந்த 3 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி தன்னிடமிருந்த ஒன்றரை லட்ச ரூபாய் மற்றும் ₹15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றதாக மகேந்தர் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற அயனாவரம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது மகேந்தர் கூறிய தகவல்கள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அயனாவரம் உதவி கமிஷனர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் மகேந்தர் கூறியபடி யாரும் வந்து போனதற்கான காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை. மேலும் பறிக்கப்பட்டதாக கூறப்பட்ட மகேந்தரின் செல்போன் அவரது வீட்டில் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு முழுவதும் துருவிதுருவி விசாரணை நடத்தினர். அப்போது, மகேந்தர் தனது நண்பரான அயனாவரம் அண்ணா தெருவைச் சேர்ந்த சுக்காராம் (25) என்ற நபருடன் சேர்ந்து பணத்தை கையாடல் செய்தது அம்பலமானது. அந்த பணத்தை அயனாவரம் சோமசுந்தரம் 6வது தெருவில் உள்ள பிக்காராமிடம் மகேந்தர் கொடுத்து வைத்திருந்தார். இதனையடுத்து ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தை அயனாவரம் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தனது முதலாளியை ஏமாற்றி பணம் கையாடல் செய்த குற்றத்திற்காக மகேந்தர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த சுக்காராம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post துணிக்கடை கலெக்‌ஷன் பணம் ₹1.50 லட்சம் வழிப்பறி நாடகம்: ஊழியர், நண்பர் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: