சாலையை விரிவுபடுத்த மழைநீர் கால்வாய் மூடல்

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட புத்தகரம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கால்நடை மருந்தகம், கிராம நிர்வாக அலுவலகம், இசேவை மையம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. தற்போது மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் ஊத்துக்காடு பகுதியில் இருந்து புத்தகரம் வரையிலான சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளின்போது, புத்தகரம் கிராம முக்கிய சாலைகளில் உள்ள மின்கம்பங்கள் மாற்றி சீரமைக்கப்படாமலே விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், அங்கு சாலையை ஒட்டியுள்ள தரைப்பாலங்களை இணைக்கும் மழைநீர் கால்வாய்களை மூடியும் நெடுஞ்சாலை துறையின் தனியார் ஒப்பந்ததாரர்கள் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அங்கு மழைக்காலங்களின்போது அக்கால்வாயின் வழியே மழைநீர் வெளியேற வழியின்றி, புத்தகரம் கிராமத்துக்குள் வெள்ள நீர் புகும் அபாயநிலை ஏற்பட்டிருக்கிறது. அங்கு சாலை விரிவாக்கப் பணிகளின் ஆய்வுக்கு வரும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை இப்பிரச்னை குறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். எனினும், மக்களின் கோரிக்கைகளை ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் அலட்சியப்படுத்தி சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, புத்தகரம் ஊராட்சியில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகளை மாவட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அங்கு மூடப்பட்ட மழைநீர் கால்வாய்களை சீரமைத்தும், சாலை நடுவே இருக்கும் மின்கம்பங்களை மாற்றி சீரமைப்பதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post சாலையை விரிவுபடுத்த மழைநீர் கால்வாய் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: