பருவநிலை மாற்றத்தால் அழிவுக்கு சென்ற தென்னை விவசாயம் நான்கு ஆண்டுகளுக்கு பின் ஏறுமுகத்தில் தேங்காய் விலை

*கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி

கம்பம் : பருவநிலை மாற்றத்தால் தென்னை விவசாயம் அழிவுக்கு சென்ற நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பின் தேங்காய் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தென்னை சாகுபடியில் தமிழக அளவில் ஏழாவது இடத்தில் இருக்கிறது தேனி மாவட்டம். வருசநாடு, கம்பம் பள்ளத்தாக்கு, மஞ்சளாறு வடிநிலம், கொட்டக்குடி பாசனம் உள்ளிட்ட பகுதிகளில் அபரிமிதமான விளைச்சல் இருக்கிறது. கிட்டத்தட்ட 26 ஆயிரம் ஏக்கரில் தேனி மாவட்டத்தில் மட்டும் தென்னை சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக இல்லாத விலையேற்றம் தற்பொழுது தேங்காய்க்கு ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக ரூ.22 முதல் ரூ.34 வரை மட்டுமே விற்பனையானது.

தற்சமயம் ஒரே வாரத்தில் கிலோ ரூ.10 அதிகரித்து இன்றைய நிலவரப்படி தேங்காய் கிலோ ரூ.45 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது குட்டைத்தென்னை மூன்று முதல் நான்கு ஆண்டுகளிலேயே பலன் அளிப்பதால், ஏராளமான விவசாயிகள் குட்டைத் தென்னையை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக வரலாறு காணாத விலை வீழ்ச்சியால் கிட்டத்தட்ட தேனி மாவட்டத்தில் மட்டும் தென்னை விவசாயிகள், தொழிலாளர்கள் உட்பட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தால், தென்னை விவசாயம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது.

தமிழகத்தை தாண்டி குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களுக்கெல்லாம் கொண்டு செல்லப்பட்ட தேனி மாவட்டத்து தேங்காய்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக பரிதாபத்தின் உச்சிக்கு சென்றது. தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் தென்னை விவசாயம் படிப்படியாக குறைந்தது. கடந்து நான்கு வருடங்களாக வரலாறு காணாத விலை வீழ்ச்சியில் திக்கு முக்காடி போயினர் தென்னை விவசாயிகள். கடந்த வருடங்களில் தேங்காய் கிலோ மிக மோசமாக வீழ்ச்சி அடைந்து ரூபாய் 22 க்கு விலை போனது.கடந்த ஆறு மாதங்களாக ஒரு கிலோ தேங்காய் ரூ.32க்கு விற்பனையானது. தென் மாநிலங்களான ஆந்திரா கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான தேங்காய்கள் கொப்பரைக்கு அனுப்பப்படுவதால் தேங்காய் விலை கடந்த நான்காண்டுகளாக சரிவர உயரவில்லை.

தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் விலையேற்றம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த விவசாயிகள் வாழ்வில் தற்பொழுது தேங்காயின் விலை உயர தொடங்கியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தேங்காய் மொத்த வியாபாரியான செல்லவர் கூறுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக தேங்காயின் விலை அதாள பாதாளத்திற்கு சென்று மொத்த விலையில் ரூ.18க்கும் சில்லரை விலையில் கிலோ ரூ.22க்கும் விற்பனை செய்தோம். தேனி மாவட்டத்தில் செழித்து இருந்த தென்னை விவசாயம் கடந்த நான்கு ஆண்டுகளில் பாதிக்கு மேலாக தென்னை மரங்கள் அழிக்கப்பட்டு குடியிருப்பு பிளாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அழிவின் விளிம்பில் இருந்த தென்னை விவசாயம் கடந்த இரண்டு மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக விலை உயர்ந்து தற்போது வரலாறு காணாத அளவில் ஒரே வாரத்தில் கிலோவுக்கு பத்து ரூபாய் உயர்ந்துள்ளது. மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தேங்காயை விட இளநீருக்கு அதிகம் கிராக்கி இருந்ததால் பெரும்பாலான விவசாயிகள் இளநீருக்கு அறுத்து விட்டனர். இதனால் தற்போது தேங்காய் இல்லை.

தேங்காயின் வரத்து குறைந்துள்ளது. மேலும் ஆந்திராவில் இருந்து வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் தேங்காய் விலை உயர்ந்து வருகிறது. அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு தேங்காயின் விலை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் சபரிமலை சீசன் தொடங்க உள்ள நிலையில் தேங்காய்க்கு அதிக தேவை ஏற்படும் என்பதால் விலை குறைய வாய்ப்பில்லை.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக விலை இல்லாத தென்னை உரிமட்டை விவசாயிகளுக்கு மற்றொரு இழப்பாக இருந்தது. உரிமட்டையை இலவசமாக அள்ளி செல்ல கூட ஆட்கள் இல்லாத நிலை தற்சமயம் மாறி உரிமட்டை 70 பைசாவிற்கு விற்பனையாகிறது. இதனால் தென்னை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இரட்டிப்பு சந்தோசம் ஏற்பட்டுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு தென்னை நார் ஏற்றுமதி வெகுவாக குறைந்ததால் உரிமட்டைகள் வாங்க ஆளில்லாமல் தேங்கி போனது. தற்சமயம் உரிமட்டையும் விலை போவதால் மீண்டும் விவசாயிகள் அதிக அளவில் தென்னை விவசாயம் செய்ய வாய்ப்புள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு லட்சம் தென்னை மரங்களை தேனி மாவட்ட விவசாயிகள் இழந்துள்ள நிலையில் இந்த விலை ஏற்றம் விவசாயிகள் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதேவிலை நீடிக்க தென்னை விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் குறைந்தபட்ச ஆதார விலையை, அரசு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

சாகுபடிக்கு புத்துயிர் கொடுக்க கோரிக்கை

தென்னை சாகுபடியினை அதிகரிக்கவும் தென்னை சாகுபடி விவசாயகளை பொருளாதார ரீதியாக உயர்த்தவும் வேளாண்மைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தென்னை விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கவேண்டும். தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு அதிக மானிய விலையில் உரங்கள், நிலத்தில் உழவு செய்ய மினி டிராக்டர், மற்ற இதர இடுபொருட்களையும் வழங்கவேண்டும்.

விளைநிலங்களில் புதிததாக தென்னை சாகுபடி செய்ய ஊக்குவிக்க வேண்டும். தென்னை சாகுபடி செய்ய ஆர்வமாக உள்ள விவசாயிகளை வேளாண்மை அலுவலர்கள் சந்தித்து, அதிகம் லாபம் தரக்கூடிய தென்னை நாற்றுகளை மானிய விலையில் வழங்கி, அதற்கு நடவு, பராமரிப்பு, உரம், மருந்து தெளிப்பு உள்ளிட்டவைகள் வழங்கி தென்னை சாகுபடி புத்துயிர் பெற வாய்ப்புள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

The post பருவநிலை மாற்றத்தால் அழிவுக்கு சென்ற தென்னை விவசாயம் நான்கு ஆண்டுகளுக்கு பின் ஏறுமுகத்தில் தேங்காய் விலை appeared first on Dinakaran.

Related Stories: