மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள 6 பத்திரிகையாளர்களுக்கு ரூ.10,01,206 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 6 பத்திரிகையாளர்களுக்கு மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள பத்திரிகையாளர் நலநிதித் திட்டத்தின் கீழ் ரூ.10,01,206/- நிதியுதவி வழங்கினார். முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பத்திரிகையாளர் நலநிதித் திட்டத்தின் கீழ் இன்று தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமைச் செயலகத்தில் உடல் நலம் குன்றி மருத்துவம் சிகிச்சைகள் மேற்கொண்ட 6 பத்திரிகையாளர்களுக்கு மொத்தம் 10 இலட்சத்து ஆயிரத்து 206 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் 14.1.2008 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி புதிய திட்டமாக பத்திரிகையாளர் நல நிதியம் உருவாக்கப்பட்டது. அன்று அரசின் 1 கோடி ரூபாய் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ நிதியுதவி வழங்கிட வழி செய்யப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தி-மக்கள் தொடர்புத்துறையின் பத்திரிகையாளர் நல நிதித் திட்டத்தின் கீழ் 19.7.2022 அன்று பிறப்பித்த அரசாணையின்படி பத்திரிகையாளர்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் போது ஏற்படும் மருத்துவச் செலவினை ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு நிதியுதவியாக ரூ 2 இலட்சத்து 50 ஆயிரம் வரையும் பத்திரிகையாளர் ஓய்யூதியம் பெறுபவர்களுக்கு பத்திரிகையாளர் நல நிதித் தொகையிலிருந்து 50 சதவிகித தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில், தமிழ் வளர்ச்சி (ம) செய்தித் துறை அமைச்சர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் 6 பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ நிதியுதவியாக மொத்தம் ரூ.10,01,206/-க்கான காசோலைகளை வழங்கினார். மேலும், செய்திமக்கள் தொடர்புத்துறை மூலமாக கடந்த 2021 முதல் தற்போது வரை பத்திரிகையாளர் நல நிதித் திட்டத்தின் கீழ் 13 பத்திரிகையாளர்களுக்கு மொத்தம் ரூ.25,11,339/-ம் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்வின்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர் (செய்தி) எஸ்.செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள 6 பத்திரிகையாளர்களுக்கு ரூ.10,01,206 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!! appeared first on Dinakaran.

Related Stories: