சிவில் பிரச்னைக்கு கிரிமினல் வழக்கு உபி போலீசுக்கு அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்: சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக கண்டனம்

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த ரிகாப் பிரானி மற்றும் சாதனா பிரானி ஆகியோர் தங்களுக்கு சொந்தமான கிடங்கை ரூ.1.35 கோடிக்கு ஷில்பி குப்தாவுக்கு விற்பனை செய்ய வாய்மொழி ஒப்பந்தம் செய்து கொண்டனர். குப்தா ஒப்புக் கொண்டபடி 2020 செப்டம்பர் 15ம் தேதிக்குள் 25 சதவீத தொகையை செலுத்த தவறினார். அவர் ரூ.19 லட்சம் மட்டுமே கொடுத்திருந்தார். இதனால் பிரானி குடும்பத்தினர் கிடங்கை ரூ.90 லட்சத்திற்கு வேறொருவருக்கு விற்று விட்டு, குப்தா தந்த ரூ.19 லட்சத்தை திருப்பித் தர மறுத்துவிட்டனர்.

இதுதொடர்பாக பிரானி குடும்பத்தினர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டுமென 2 முறை குப்தா உள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தை அணுகினார். இது சிவில் சம்மந்தப்பட்ட விவகாரம் என்பதால் நீதிமன்றம் அனுமதி மறுத்த நிலையிலும், மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் பிரானி குடும்பத்தினர் மீது உபி போலீசார் குற்றவியல் வழக்கு பதிவு செய்தனர். இதை எதிர்த்து பிரானி குடும்பத்தினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகிய போது எப்ஐஆரை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘‘உத்தரப்பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலைந்துள்ளது. சிவில் தவறுகளுக்கு கிரிமினல் வழக்கு பதிவு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே சம்மந்தப்பட்ட உபி போலீசார் ரூ.50,000 அபராதம் செலுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் உபி போலீஸ் டிஜிபி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

The post சிவில் பிரச்னைக்கு கிரிமினல் வழக்கு உபி போலீசுக்கு அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்: சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: