புதுடெல்லி: தேசியப் பொருளாதார நுழைவாயில் திட்டத்தின் கீழ் நிதியுதவிக்காக அடையாளம் காணப்பட்ட நகரங்கள் எவை என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்திடம் மக்களவையில் மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகள் வருமாறு:
பிரதமர் தலைமையில் முன்மொழியப்பட்டுள்ள தேசிய நகர்ப்புற மற்றும் பிராந்திய திட்டமிடல் ஆணையம் எந்த விதத்தில் செயல்பட உள்ளது என்ற விவரங்களைத் தெரியப்படுத்தவும்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் ஏற்படுகின்ற நகர்ப்புறத் திட்டமிடலாளர்களின் பற்றாக்குறையைத் தீர்க்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அல்லது முன்மொழியப்பட்ட திட்டங்கள் என்ன?
மாநிலங்களே நகர்ப்புறத் திட்டமிடலாளர்களை பணியமர்த்திக் கொள்ள ஒன்றிய அரசு ஏதேனும் நிதி ஒதுக்கியுள்ளதா அல்லது அதற்கான முன்மொழிவுத் திட்டங்கள் ஏதேனும் உள்ளதா என்றும் அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தெரியப்படுத்தவும். முன்மொழியப்பட்டுள்ள நகரம் மற்றும் கிராமத் திட்டமிடலாளர்கள் சட்டத்தில் சேர்க்கப்படவுள்ள விதிகள் என்ன என்றும் அது குறித்த விவரங்களைத் தெரியப்படுத்தவும்.
நகரப் பகுதிகளை பொருளாதார நுழைவாயில்களாக மேம்படுத்துவதினால் வெளிநாட்டுத் திறமைகளையும், முதலீட்டையும் ஈர்க்க முடியுமா என்றும் அவ்வாறெனில் எதனடிப்படையில் அதன் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது? தேசியப் பொருளாதார நுழைவாயில் திட்டத்தின் கீழ் நிதியுதவிக்காக அடையாளம் காணப்பட்ட நகரங்கள் எவை என்றும் முறைசாரா பொருளாதாரத்தை ஒருங்கிணைத்து, இந்த திட்டத்தில் திறன் வளர்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்ன? எனவும் கேள்வி எழுப்பினார்.
The post தேசிய பொருளாதார நுழைவாயில் திட்டத்தின் கீழ் நிதியுதவிக்காக அடையாளம் காணப்பட்ட நகரங்கள் எவை?.மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி appeared first on Dinakaran.