கிறிஸ்துமஸ் பண்டிகை எதிரொலி: சென்னையிலிருந்து தென் மாவட்டம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு செல்ல விமான கட்டணம் பல மடங்கு உயர்வு!!

சென்னை: தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்திற்கு செல்லும் விமானங்களில், பயணிகள் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு விடுமுறையுடன் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறை காரணமாக சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட வெளியூர் பயணிகள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதிலும், வெளிநாடுகளுக்கும், இந்தியாவில் உள்ள சுற்றுலா நகரங்களுக்கு செல்வதிலும் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் குறிப்பாக தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, கொச்சி, திருவனந்தபுரம் செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சபரிமலை பக்தர்கள் கூட்டமும் அலை மோதுவதால் கொச்சி, திருவனந்தபுரம் விமானங்களில் வழக்கத்தை விட அதிகமான பயணிகள் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதால் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை – திருவனந்தபுரம் இடையிலான கட்டணம் ரூ.2,800லிருந்து சுமார் ரூ.15,000 வரை உயர்ந்துள்ளது.

கொச்சி நகருக்கான கட்டணம் ரூ.3,000லிருந்து சுமார் ரூ.16,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை – தூத்துக்குடி இடையிலான விமான கட்டணம் ரூ.4,000 லிருந்து ரூ.14,000 வரை உயர்ந்துள்ளது. சென்னை – மதுரை இடையிலான கட்டணம் ரூ.3,314 லிருந்து ரூ.10,192 முதல் ரூ.17,950 வரை உயர்ந்துள்ளது. சென்னை – கோவை இடையிலான கட்டணம் ரூ.3,315 லிருந்து ரூ.14,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை – திருச்சி இடையே ரூ.2,579ஆக இருந்த கட்டணம் ரூ.9,555 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

The post கிறிஸ்துமஸ் பண்டிகை எதிரொலி: சென்னையிலிருந்து தென் மாவட்டம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு செல்ல விமான கட்டணம் பல மடங்கு உயர்வு!! appeared first on Dinakaran.

Related Stories: