சின்னமனூர் அருகே 20 ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணியை வேகப்படுத்த வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

சின்னமனூர் : சின்னமனூர் அருகே 20 ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணியை வேகப்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னமனூர் திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் 27 வார்டுகளை கொண்ட பரபரப்பு மிகுந்த நகராட்சியாக உள்ளது.

இங்கு சுமார் 85 ஆயிரம் பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு விவசாயமே முக்கிய மூலதனமாக இருப்பதால் இரு போகம் நெல் சாகுபடி, வாழை, தென்னை, திராட்சை, காய்கறிகள், தக்காளி என பலதரப்பட்ட விவசாய சாகுபடிகள் பெரியாற்று தண்ணீர் மூலம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் தினம் தரும் டன் கணக்கில் குப்பைகள் சேர்ந்து மலை போல் குவிக்கப்படுகின்றன. நகராட்சி தூய்மை பணியாளர்கள் அன்றாடம் சேகரிக்கும் குப்பை கழிவுகளை ஒட்டு மொத்தமாக இரண்டாவது வார்டு பகுதியில் உள்ள சாமிகுளத்திற்குள் நகராட்சி குப்பைக் கிடங்கில் சேர்த்து மலை போல் குவித்து வைப்பது வழக்கம்.

2015ம் ஆண்டு வரைக்கும் அதிகப்படியான குப்பைக்கழிவு கொட்டி வைக்கப்பட்டதால் அங்கு மேலும் கொட்டுவதற்கு இடம் இல்லாததால் குப்பை கிடங்கை விரிவாக்கம் செய்யும் விதத்தில் சின்னமனூர் நகராட்சியிலிருந்து சின்னமனூர் அய்யனார்புரம் 27வது வார்டு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு அவ்விடத்தை விலைக்கு வாங்கி குப்பை கிடங்காக மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக சாமிகுளத்தில் குவித்து வைக்கப்பட்ட குப்பை கழிவுகள் அதனை அகற்றப்படாமல் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கிருந்து அதிக து ர்நாற்றம் வீசுவதால் சாமிகுளம், காந்திநகர் காலனி பகுதியில் பொதுமக்கள் குடியிருக்க முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதற்கு இடையில் சின்னமனூர் நகராட்சியில் சாமிகுளத்தில் இருக்கின்ற குப்பை கழிவுகளை மறு சுழற்சி செய்து அதில் இருக்கும் பாட்டில்களின் துகள்கள், இரும்பு துகள்கள், கற்கள், பீங்கான், தேவையில்லாத துகள்களை அகற்றி சலித்து சுத்தம் செய்து பிரித்து எடுக்கப்படும் குப்பைகளை ஒட்டு மொத்தமாக அகற்றி நடவடிக்கை எடுப்பது என நகர் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்காக சுமார் 3 கோடி ரூபாயில் கடந்த 9 மாதத்திற்கு முன்பாக பொது ஏலமாக டெண்டர் விடப்பட்டது.ஆனால் ஏலம் எடுத்தவர் இதுவரையில் குப்பைகளை அகற்றும் பணிகளை துவங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து குப்பைகள் அகற்றும் பணி குறித்து பொதுமக்கள் அழுத்தம் கொடுத்து வந்ததின் விளைவாக, கடந்த 20 நாட்களுக்கு முன் குப்பைகளை மறு சுழற்சி செய்யும் இயந்திரத்தை மட்டும் சாமிகுளத்தில் வைத்து சென்றுள்ளனர்.

ஆனால், பணிகள் அனைத்தும் அப்படியே உள்ளன.ஆனால் பொதுமக்களின் நலன் கருதி நகர் மன்றத்தில் வைத்த தீர்மானத்தின் அடிப்படையில் ஏலம் விடப்பட்டு பணிகள் ஒதுக்கி கொடுத்தாலும் ஏலம் எடு த்தவர் அதற்கான பணிகள் செய்யாமல் காலம் கடத்துவதால் பொதுமக்கள் மேலும் மேலும் பல வித தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டும் பெரும் துர்நாற்றத்தால் குடியிருக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து நேரில் ஆய்வு செய்து ஏலம் எடுத்து பணிகள் செய்ய விருப்பம் இல்லை என்றால் பணி செய்ய ஆர்வமாக உள்ள வேறு ஒருவருக்கு டெண்டரை கொடுத்து, குப்பைகளை அகற்றும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

The post சின்னமனூர் அருகே 20 ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணியை வேகப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: