சின்னமனூர் பகுதிகளில் குறுகிய கால காய்கறிகளை பயிரிட ஆர்வம் காட்டும் விவசாயிகள்

சின்னமனூர்: சின்னமனூர் பகுதியில் அனைத்து காய்கறிகள், தக்காளி என குறுகிய கால பயிர்களை 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்து வருகின்றனர். பெரியாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் கண்மாய் குளங்களில் தேக்கப்படுவதால் ஆங்காங்கே நிலத்தடி நீர் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து பிடி.ராஜன் கால்வாயிலும் தண்ணீர் திறப்பதால் அதுவும் கண்மாய் குளங்களில் தேங்குகிற போது ஆழ்குழாய் பாசனத்திலும், கிணற்று பாசனத்திலும் கூடுதல் தண்ணீர் பெருகுகிறது.

இதனை கொண்டு குறுகிய கால சாகுபடியான கத்திரிக்காய், வெண்டைக்காய்,கொடி மற்றும் செடி அவரை, சின்ன பீன்ஸ், தக்காளி முள்ளங்கி உட்பட பல்வேறு காய்கறிகள் பயிரிட்டு வருகின்றனர். தற்போது சின்னமனூர் பகுதியில் உள்ள குச்சனூர், மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, எல்லப்பட்டி, முத்துலாபுரம், எரசக்கநாயக்கனூர் போன்ற பகுதிகளில் செடி அவரைக்காய் சாகுபடி செய்யும் வகையில் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர்.

ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து, மருந்து, உரம், களை எடுப்பு என பயன்படுத்தி ஒரு மாதத்தையும் கடந்து தீவிரமாக வளர்ந்து வருகிறது. 70வது நாட்கள் கழித்து அவரைக்காய் அறுவடை செய்யப்படும். அவ்வாறு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் இப்பகுதியில் உள்ள ஏலச் சந்தை உழவர் சந்தை, தேனி சந்தை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வியாபாரிகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து எடுத்துச் செல்கின்றனர்.

The post சின்னமனூர் பகுதிகளில் குறுகிய கால காய்கறிகளை பயிரிட ஆர்வம் காட்டும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Related Stories: