அமைச்சர்களின் மாவட்டம் – பொறுப்பு மாவட்டத்தின் வெற்றித் தோல்விக்கு அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டும் :முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை : உங்கள் தொகுதியில் வெற்றியை நழுவவிட்டால் , உங்கள் அமைச்சர் பொறுப்பே நழுவி விடும் என்று மக்களவை தேர்தலையொட்டி அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு திமுக முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவை திமுக தலைமை அமைத்துள்ளது. இந்த குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் இருக்கும் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்தனியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தியது. கள நிலவரம், வாய்ப்புள்ள வேட்பாளர்கள், தொகுதியில் கூட்டணிக்கட்சிகளின் பலம் குறித்து குழுவினர் கேட்டறிந்தனர். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் குறைந்தால் பொறுப்பு அமைச்சர்கள் தொடங்கி ஒன்றிய செயலாளர் வரை அனைவர் மீதும் நடவடிக்கை பாயும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், தொகுதியில் இருக்கும் கட்சியின் சாதக பாதக அம்சங்கள் குறித்து, தேர்தல் குழுவிடம் ஆலோசிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தீர்க்க முடியாத பிரச்சினையை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வரவும் அவர் அறிவுரை வழங்கி உள்ளார். மேலும், “அமைச்சர்களின் மாவட்டம் – பொறுப்பு மாவட்டத்தின் வெற்றித் தோல்விக்கு அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டும். கூட்டணியை ஒருங்கிணைத்து நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை அறுவடை செய்ய வேண்டும். 40 தொகுதிகளில் வெல்வதுடன் திமுக பங்கு வகிக்கும் அரசாங்கம் மத்தியில் அமைய வேண்டும். எல்லா தொகுதியிலும் நான்தான் வேட்பாளராக நிற்கிறேன் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்,”என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post அமைச்சர்களின் மாவட்டம் – பொறுப்பு மாவட்டத்தின் வெற்றித் தோல்விக்கு அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டும் :முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: